11/22/2010

நேரத்தை நிர்வகிப்பது எப்படி? ( TIME MANAGEMENT)

எனக்கு நேரமே இல்லை’ என்று நாம் சொல்வது வாடிக்கை. ஆனால் அப்படிச் சொல்வதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை. காலை எழுந்தவுடன் ஒவ்வொருவர் கையிலும் அரிதான ஒரு செல்வம், இந்த தேசத்தின் முதல் குடிமகன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. அது தான் நாளொன்றுக்கு வழங்கப்படும் 24 மணி நேரம். இந்த ஒன்றில் மட்டுமே உலகெங்கும் சம தர்மம் நிலவுகிறது.

நேரத்தை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் செலவழித்து விடுகிறார்கள். ஆனால் செலவழித்த அனைவருமே வெற்றி வாகை சூடுவதில்லை. நேரத்தை எந்த அளவுக்கு சிக்கனமாக, முழுமையாக, முறையாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது. அதில் அவரவர் திறமை ஆளுமை, வளர்ச்சி என வாழ்க்கைப் புதையலே மறைந்துள்ளது.
‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்பது குறள். இது பொருட் செல்வத்துக்கு மட்டுமன்று, நேரச் செல்வத்திற்கும் பொருந்தும் நேரத்தை அளவறிந்து செலவு செய்யாதவனுடைய வாழ்க்கை இருப்பது போல் தோன்றினாலும் இல்லாமல் அழிந்துவிடும். நேரத்தை மிகுந்த பயனுள்ளதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் வழிமுறையைத்தான் நேர நிர்வாகம் என்கிறோம்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை நேசிக்க வேண்டும். வெற்றி பெறத் துடிப்பவர்கள் நேரத்தைப் போற்ற வேண்டும். காலத்தை கொண்டாடுகிறவர்களைத்தான் காலம் கொண்டாடும் மற்றவர்களை அது வெறுமனே கொண்டுபோகும். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள், நேரத்தைத் தவிர, என்ற நெப்போலியன் கூற்று நேரத்தின் அருமைக்குச் சிறந்த சான்று.
எதனோடும் ஒப்பிடமுடியாத அளவுக்கு மதிப்புமிக்க நேரத்தை எப்படியெல்லாம் நிர்வகித்து வாழ்வை வளப்படுத்திக் கொள்வது என்ற விழிப்புணவர்வை ஏற்படுத்தி அதற்கான வழிமுறைகளை கோடிட்டு காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். முதலாவதாக நேரத்தை சிறந்த முறையில் கையாளுவதற்கான சில வழிறைகள்;
1 ) நேர பட்ஜெட் தயாரித்தல்:
நேரத்தை நிர்வகிக்க நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் பட்ஜெட் தாயரிப்பது. அதாவது நேரத்திற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது. ஒவ்வொரு நாளும் வரவு 24 மணி நேரம் அதை உடல் ஆரோக்கியத்திற்கு பொருள் தேடுவதற்கு, படிப்பதற்கு, உற்சாகத்திற்கு, ஓய்விற்கு உறக்கத்திற்கு என்று ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும்.
பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டால் நமது நேரம் எந்தெந்த வகைகளில் விரயமாகிறது என்பதை பட்டியலிட்டு நேரத்தை பெருமளவில் வீணாக்கும் அரட்டையடித்தல், ஊர் வம்பு பேசுதல், தொலைக்காட்சிப் பார்த்தல் போன்றவற்றிற்கு ஒரு வரம்பு கட்ட வேண்டும். இதன் மூலம் மிச்சப்படுகிற நேரத்தை கொண்டு பற்றாக்குறையை சரிகட்டலாம்.
2) பணிகளை வகைப்படுத்துதல்:
பணிகளில் அவசரப்பணிகள் எவை என்றும் அவசியப் பணிகள் எவை என்றும் வகைப்படுத்தி செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டியவை அவசரப்பணி. ‘இத்தனை மணிக்குள் பணத்தை கட்ட வேண்டும். இன்றைக்குள் டிக்கெட் வாங்க வேண்டும் என்பது போன்றவை. நமது இலக்கை அடைய உதவும் பணிகள் அவசியப் பணிகள். பிளாட் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவை இதில் அடங்கும். அவரசப் பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அவசியப்பணிகளை ஆற அமர யோசித்து செய்ய நேரம் உண்டு.
3) பரிபூரணத்துவ (Over Perfection) எண்ணம் கூடாது:
ஒரு பணியை எந்தவிதக் குறையும் பிழையுமின்றி சிறந்த முறையில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால் இந்த உணர்வை கட்டாயமாக்கிக் கொள்ளக்கூடாது. அதிகமான பரிபூரணத்துவ எண்ணம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பழக்கம் பணியை செயலிழக்கச் செய்து பணியை ஒத்திப்போடத் தூண்டும் தவிர்க்க முடியாமல் செயலில் ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிட்டால் அது மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய செய்த செயலையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கக்கூடாது.
4) பொறுப்புகளை பகிர்ந்தளித்தல்:
நாமே எல்லாவற்றையும் செய்து முடிக்க முயற்சிக்கக்கூடாது. அது தோல்வியில்தான் முடியும். நம்மால்தான் சிறப்பாக செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. உரிய முறையில் பொறுப்புகளைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க பழக வேண்டும். உதாரணமாக ஒரு மேலாளர் அனைத்துப் பணிகளையும் தானே செய்து முடிப்பது கடினம். அவர் உரியவரிடம் பொறுப்புகளையும், வேலையையும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
5) வீண் பேச்சை தவிர்த்தல்:
சக ஊழியர்களிடம் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையற்ற செய்திகளைப் பேசக்கூடாது. இச்செயல் அவர்களையும் தேவையற்றதை பேச ஊக்குவித்து நேரத்தடையை ஏற்படுத்தும். அதிக அளவிலான உறவு கடமையை முழுமையாகச் செய்ய உதவாது. சுமக உறவு கொள்வதற்கு ஒரு எல்லை வகுத்துக் கொள்ளவேண்டும்.
6) தொலைபேசி உரையாடல்:
இப்போதெல்லாம் தொலைபேசி மற்றும் அலைபேசியின் உபயோகத்தை விட தொந்தரவுகளே அதிகமாகி வருகின்றன. தொலைபேசியில் எப்போது, எப்படி, எவ்விதம் பேசுவது என்பதற்கு ஒரு நெறிமுறைவகுத்துக் கொண்டால் ஒழிய நேரத்தை சேமிக்க முடியாது. தொலைபேசியில் அவசியமெனில் மட்டுமே பேச வேண்டும். நண்பர்களையும் மற்றவர்களையும் அலுவலக நேரத்தில் தொலைபேசியில் அழைத்துப் பேச ஊக்குவிக்க கூடாது. தொலைபேசியை அவசியமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எத்தனையோ முக்கிய பணிகளுக்கு நேரம் இல்லை என்ற நிலையில் பல இடங்களில் அந்த நேரம் வீணாகிப் போகிறது. பேருந்து ரயில்வே நிலையங்கள், விருந்தினர்கள் வரவேற்பு என்று அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாய் காத்திருப்புகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. அந்த காத்திருப்புகளை பயனுள்ளதாக மாற்ற முடியும். ‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ தினம் தினம் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளையும் கிடைக்கும் சிறு சிறு நேர இடைவெளிகளையும் உரிய முறையில் இணைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இன்றைக்கு செய்ய வேண்டியதை நாளைக்கு செய்ய இருக்கிற வேலைகளை இன்றைக்கே செய்கிற முயற்சியும் வேண்டாம். இலக்குகளை சிறிய அடைவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பள்ளத்தை இரண்டு தாண்டல்களில் தாண்ட முடியாது.
ஒரு நல்ல செயலைச் செய்ய கால நேரம் பார்க்கக்கூடாது. ‘நல்லதுக்கு காலமில்லை’ என்ற முதுமொழி கூறுவது இதைத்தான். ஒவ்வொரு நாளும் ராகு காலம், எமகண்டம், என்று பல மணி நேரத்தை பலர் எந்தக் காரியமும் செய்யாமல் வீணாக்கி விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, அஷ்டமி, நவமி, பாட்டிமை, செவ்வாய்க்கிழமை என்று பல நாட்கள் வீணாக்கப்படுகிறது. இக்கணக்கின்படி ஆண்டில் 168 நாட்கள் கெட்ட நாட்கள். இப்படி நாள்தோறும் பல மணிநேரமும் மாதந்தோறும் பல நாட்களும் வீணாக்கப்பட்ட நாட்களை வாழ்நாள் முழுவதற்கும் கணக்கிட்டால் ‘வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை வீணாக்கிவிட்டோமா!’ என்று மலைப்பாக இருக்கும்.
உங்களுக்கு ஒரு வங்கி கணக்கு இருக்கிறது என்று வையுங்கள். தினமும் அதில் ரூ. 86400 வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அதை அதே தினம் செலவழிக்க வேண்டும். மிச்சமிருப்பதை மறுநாள் பெற முடியாது. அப்படி என்றால் என்ன செய்வோம்? ஒவ்வொரு நாளும் அன்றைய வரவை ஜாக்கிரதையாக அன்றே செலவு செய்வோம். வருங்காலத்திற்காகச் சரியான இடத்தில் முதலீடு செய்வோம். பண வங்கிக்கு பொருந்தும் இந்த நியதி நேர வங்கிக்கும் பொருந்தும். அதாவது ஒவ்வொரு நாளும் நம்முடைய நேர வங்கியில் 86400 நொடி நேரம் வரவு வைக்கப்படுகிறது.. அதனை முறையாக முதலீடு செய்ய வேண்டும். செலவழிக்காமல் விட்ட நேரம் மறுநாள் கிடைக்காது. ஆனால் அன்றைய தினம் தள்ளிப் போட்ட வேலைகளும் மறந்துவிட்ட கடமைகளும் அடுத்த நாள் வந்து சேர்ந்து கொள்ளும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு கடைபிடிக்க வேண்டிய கபிலரின் பாடல் ஒன்றினைப் பாருங்கள்.
ஒன்றைச்செய்யவும் வேண்டும்
ஒன்றும் நன்றே செய்ய வேண்டும்
நன்றும் இன்றேசெய்ய வேண்டும்
இன்றும் இன்னே செய்ய வேண்டும்

ரமண மகிரிஷியிடம் ஒருவர் ‘உலகின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது’ என்றாராம். அதற்கு ரமணர்’ ‘எதிர்காலத்தை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நிகழ்காலத்தையே நீங்கள் சரியாக அறியவில்லையே. நிகழ்காலத்தை சரியாகப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வருங்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்’ என்று தெளிவுபடுத்தினாராம். எனவே நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்ந்தால் எதிர்கால வாழ்க்கை புதிராக இருக்காது. புதிதாக இருக்கும்.
எந்தவொரு செயலுக்கும் பொருள் மற்றும் பணத்தைப் போல காலம் என்பதுவும் ஒரு முதலீடு காலத்தின் அடிப்படையில்தான் முதலீடு ‘நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடுய என்று வகைப்படுத்தப்படுகிறது. காலச்செல்வம் அனைவருக்கும் எளிதாக, இலவசமாக கிடைக்கக்கூடிய ஒன்று. அதனை சிறப்பான வழியில் முதலீடு செய்ய வேண்டும்.
விடிந்தது எழுந்தோம், இருட்டியது படுத்தோம் என்று இருந்தால் ஒருகாலும் வளமாக வாழ முடியாது. காலையில் எழுந்தவுடன் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்க வேண்டும். அங்கே இங்கே பேசுவது, அப்படி இப்படி வேடிக்கை பார்ப்பது என்று காலத்தைக் கழித்தால் வெற்றி எப்படி கிட்டும்?
‘பொழுதுபோக்கு’, ‘பொழுதைக் கழிப்பது’ என்று கூறுவதே தவறு. வெற்றிக்கு முதல் தகுதி பொழுதை நல்ல வழியில் பயன்படுத்துதலே ஆகும். போனால் வராத பொழுதை நாம் போற்றி வாழ பழகிக் கொள்ள வேண்டும். கடவுளால் தரப்பட்ட அரிய கொடை பொழுது. அதன் அருமை தெரியாதவர்கள்தான் ‘பொழுது போகவில்லை’ என்று புலம்புவார்கள். காலத்தின் அருமை தெரிந்தோர் ‘பொழுது போதவில்லை’ என்று வருந்துவார்கள்.
‘நீ கூற நினைக்கும் உண்மையை முதல் மனிதனாக நீயே அறிவித்து விடு இல்லையேல் இன்னொரு மனிதன் அதனை அறிவித்து உயர் புகழ் அடையும்போது – முன்னரே வெளிபடுத்தாமல் போனோமே என வருந்த நேரிடும்’ என்கிறார் எமர்சன் எனும் அறிஞர். எண்ணும் காலத்திற்கும் அதனை அறிவிக்கும் காலத்திற்கும் இடைப்பட்ட சில வினாடிகள் கூட வாழ்க்கைப் பாதையை மாற்றி விடும் வல்லமை படைத்தது.
வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற்ற உழைப்பையும் மன உற்சாகத்ததையும் விடா முயற்சியையுமே துணையாகக் கொண்டு, காலநேரம் நமக்கு சாதகமாக வரும் என்று எண்ணிக் கொண்டிராமல் கருத்துடன் சிந்தித்து செயல்பட்டு நன்னம்பிக்கையோடு முயன்று முன்னேறவேண்டும்.
வாழ்க்கையும் நேரமும் ஒரே பொருளுடையது. வீணாகிற நேரம் வீணாகிற வாழ்க்கை என்று பொருள். நல்ல முறையில் உபயோகிக்கப்படுகிற நேரம் வாழ்வை வளப்படுத்துகிறது. நேரம் அதனுடைய தன்மையில் நல்லதுமல்ல. கெட்டதுமல்ல. நம் திறமையின்மைக்காக நேரத்தை குற்றம் சாட்டுவது நியாயம் அல்ல.
மனிதன்தான் நேரத்தை நிர்வகிக்க வேண்டும். நேரம் மனிதனை நிர்வகிப்பதாக இருக்கக்கூடாது. நேர நிர்வாகம் என்பது நேரத்திற்கு அடிமை ஆவது என்பதல்ல. நேரத்தை வென்று மகிழ்வுடன் வாழ உதவும் வழிமுறை. நேரத்தை நிர்வகித்து வாழ்வது ஒரு இயந்திர வாழ்க்கை என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு. நேரத்தை நிர்வகித்து வாழ்வது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்க வல்லது. நேர நிர்வாக நுணுக்கங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால் நாளொன்றுக்கு 24 மணி நேரம் அல்ல 48 மணி நேரமே கிடைக்கும்.

மன அமைதி

மன அமைதிக்கு சில யோசனைகள்

நீங்கள் மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறீர்களா? சில நெறிமுறைகளை நீங்கள் பின் பற்றுவீர்களானால், உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். பயற்சி செய்து பாருங்கள்.
1. தீயவர்களோடு உறவு கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் உங்கள் மனமும் தீமை உடையதாகிவிடும்.
தீயோரைக் காண்பதும் தீது
தீயோர் சொற்கேட்பதும் தீது
தீயோடருடன் இணங்கி இருப்பதும் தீது.
நல்லோரைக் காண்பதும் நன்று
நல்லோர் சொற் கேட்பதும் நன்று
நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று
நல்லோருன் இணங்கி இருப்பதும் நன்று.
2. சண்டை, ச்ச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். சளசளவெனப் பேசுவதைத் தவிருங்கள். அது உங்கள் சக்தியை வீணாக்கும். வீணான விவாதத்தில் உங்கள் நேரத்தைப் பாழ்படுத்தாதீர்கள். வீண் சர்ச்சை பகையை வளர்கும்.
3. உங்கள் தேவைகளைப் பெரிதும் குறைத்துக் கொள்ளுங்கள். அதீதமான ஆசையே துன்பத்திற்கு காரணம்.
ஆசைப்படப்பட ஆய்வறும் துன்பம்
ஆசை விட விட ஆனந்தமாமே!
4. ஒரு போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குத் தடை. உங்கள் மனத்திற்குச் சரி என்று பட்டதை உறுதியாகப் பின் பற்றுங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நேர்மையுடனும், மனச் சாட்சியுடனும் செயலாற்றுவீர்களேயானால் எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன்
நீங்களே உங்களுக்கு உற்றபகை
என்ற கீதை வாக்கியத்தை ஒரு போதும் மறவாதீர்கள்.
5. மற்றவர்களது கண்டனத்திற்கோ, விமர்சனத் திற்கோ ஒரு போதும் செவி சாய்க்க வேண்டாம். “உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூடமுடியுமா?” உலகத்தார் எப்போதும் குறைசொல்க் கொண்டே தான் இருப்பார்கள்
6. பெயருக்கும், புகழுக்கும் ஒரு போதும் ஆசைப்படாதீர்கள். உங்கள் கடமையைச் செவ்வனே செய்து வந்தால் ஆண்டவன் உரிய பலனைத் தருவான்.
ஏனெனில் பலனை எதிர்பார்த்துக் கடமையைச் செய்யும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை என்றால் ஏமாற்றத் தால் நாம் மனம் தளர்ந்து போவோம்.
7. எப்போதும் மகிழ்ச்சியாகவும், மனநிறை வுடனும் இருங்கள். கவலைப்படுவதை விட்டொழியுங்கள்.
8. நடப்பதெல்லாம் நன்மைக்கே. இறைவனது சங்கல்பமே என்று கொள்ளுங்கள். ஒரு போதும் துயரம் உங்களை வாட்டாது.
9. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. பிறரைக் குறைசொல்லிக் கொண்டே இருப்பதைத் தவிருங்கள். உங்கள் குடும்பத்தாரோடு அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ளுங்கள்.
10. மனதாறப் பிறரைப் பாராட்டுங்கள். தூற்றுவதால் பகையும், மனக்கசப்பும் நேரிடும். மாறாக போற்றுவதால் உறவும் வளருமன்றோ!
11. சமமானவர்களுடன் “மைத்ரி” (சிநேக பாவத்துடன்), தாழ்ந்தவர்களிடம் கருணை, உயர்ந்தவர்களிடம் மரியாதை, தீயவர்களிடம் அலக்ஷயம் (உபேஷை) ஆகியவை சித்தப் பிரசாதத்தைத் தரும். மன அமைதியைத் தரும் என்கிறார் பதஞ்சலி முனிவர். இந்த குணங்களைக் கொள்ளுங்கள்.
12. மனம் போன போக்கெல்லாம் போக விடாமல், அலைபாயும் மனதைக் கடிவாளம் போட்டு நிறுத்தப்பழகுங்கள். ஒரு போதும் மனம் தளர வேண்டாம். தவநெறியை மேற்கொண்டு மாபெரும் சக்தியைப் பெறுங்கள்.
மனம் தான் நம்மைத் தளைக்குள் சிக்க வைக்கிறது. அந்த மனதைக் கட்டி ஆளும் போது, அதுவே நமக்கு விடுதலையைத் தேடித் தந்து ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.
சக்ரவர்த்தி ஏனைய அரசர்களை எல்லாம் எப்படி வெற்றி கொண்டு. தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறாறோ, அது போல உங்கள் புலன்களை அடக்கி ஆண்டு, மனதை நிலை நிறுத்தி, அமைதியால் திளைக்கச் சதா சர்வ காலமும் தியானம் செய்யுங்கள்.
13. தீய எண்ணங்களை மனதில் புக விடாமல் அணை போடுங்கள். மனதை ஒரு முகப்படுத்தி இறை தியானத்தில் ஈடுபட்டு, சச்சிதானந்த ஸ்வரூபத்தில் திளைத்து, பேரானந்தத்தில் நிலைத்திருப்பீர்களாக!
Thanks :-thannambikkai.

11/21/2010

இறை வணக்கம்

நபிகள் நாயகம் மதீனாவில் ஒரு பள்ளி வாசலுக்கு செல்லும் போதெல்லாம்  ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடு பட்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் சிறந்த பக்திமான் என்றனர்.இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவர் குடும்ப செலவுக்கு என்ன செய்கிறார் என்று நபிகள்  கேட்டார்.அருகிலிருந்தவர் சொன்னார்,''அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.அவர் விறகு வெட்டி வியாபாரம் செய்கிறார்.அவர் தான் இவருடைய தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.''நபிகள் உடனே சொன்னார்,''இரவும் பகலும் இறைவனை வழி படும் அந்த நண்பரிடம் சொல்லுங்கள்.இவரைக்காட்டிலும் விறகு வெட்டிப் பிழைக்கும் இவரது அண்ணன் ஆயிரம் பங்கு மேலானவர்.குடும்பத்தின் தேவைக்கு நியாயமான வழியில் சம்பாதிப்பது சிறந்த இறை வணக்கம்தான் என்று அவருக்கு எடுத்து சொல்லுங்கள்.''பெருமானாரின் கூற்றை அறிந்த அந்த பக்தர் அன்று முதல் தமது அண்ணனுக்கு உதவியாக விறகு வெட்ட ஆரம்பித்தார்.ஓய்வு கிடைத்தபோதெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபட

****************************************************************************

சுபி ஞானி ஒருவரிடம் ஒரு விவசாயி வந்தான்.''ஐயா.என் மனைவி வீடு முழுவதும் ஆடு,மாடு,கோழி என்று வளர்க்கிறாள்.அதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.இதற்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.''என்று அவன் ஞானியிடம் சொன்னான்.அவன் வீட்டைக் கவனித்த அந்த ஞானி சொன்னார்,''உன் வீட்டில் தான் ஜன்னல்கள் இருக்கின்றனவே?அவற்றை ஏன் மூடி வைத்திருக்கிறாய்?ஜன்னலைத் திறந்து விட்டால் காற்று நன்றாக வரும்.துர்நாற்றமும் போய்விடும்.''உடனே விவசாயி பதற்றத்துடன் ,''ஐயையோ,ஜன்னலைத் திறந்து விட்டால்  என் புறாக்கள்  எல்லாம் பறந்து போய்விடுமே?''என்றான்.
அதிக முக்கியத்துவம் இல்லாத புறாக்களுக்காக ஜன்னலைத் திறக்காமல்  துர் நாற்றத்தை அவன் சகித்துக் கொள்கிறான் அதே போல நாமும் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை எண்ணிக்கொண்டே நமது அறிவு என்னும் ஜன்னலை திறவாதிருக்கிறோம் அதன் விளைவு தான் மன அழுத்தம்.
-தொகுப்பு Partha.

11/19/2010

கனவுகள் நினைவாக....

கனவுகள் நினைவாக... நினைத்தவை எல்லாம் நிஜமாக.... கண்ணுக்குள் கண்ட கனவு கண் முன் நடக்க ஒரு சில யோசனைகள்.

ஒரு சிலர் எவ்வளவோ பேரும் புகழும் பெறுகின்றனர். அவர்களது பணியில் சிறந்து விளங்குகின்றனர். எட்டாத புகழை அடைகின்றனர். இதெல்லாம் அவர்களால் எப்படி முடிந்தது. இதோ அந்த வெற்றியின் ரகசியம்.

நமது வாழ்க்கை எப்போதுமே ஒரு ஓட்டப்பந்தய மைதானம்தான். அதில் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருப்போம் நாம். வேகமாக ஓடுபவன் புகழை அடைகிறான். ஆனால் நாமோ எந்த லட்சியமும் இன்றி ஓடிக் கொண்டிருப்போம். மற்றவன் அடையும் புகழைக் கண்டு பொறாமைப் பட்டுக் கொண்டும் ஓடிக் கொண்டிருப்போம்.

தடுக்கி விழுந்தவனைப் பார்த்து ஏளனச்சிரிப்புடனே ஓடிக் கொண்டிருப்போம். ஓர் கட்டத்தில் நம்மால் ஓட முடியாமல் நிற்போம். அதுதான் வயோதிகம். அப்போதும் நம்மைக் கடந்து பலர் ஓடிக் கொண்டிருப்பார். இது வேண்டாமே....

வேகமாக ஓடி புகழை அடைய வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடலாமா?

அதற்காக 10 எளிய வழிகள். இவைகள் அனைத்தும் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கனவுகள் நிஜமாக கையாண்ட முறைகள்தான்.

தன்னம்பிக்கை

10 வழிமுறைகளில் எத்தனை வழிகளை நீங்கள் கையாள முடியும் என்று நினைக்கின்றீர்கள்?

அனைத்துமா? ஆம் இதுதான் முதல் வழிமுறை. வெற்றி பெற தன்னம்பிக்கை தேவை. அனைத்தையும் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை. நம்பிக்கையற்றவர்களையும், அவநம்பிக்கையையும் தவிருங்கள். வெற்றி உங்கள் பக்கத்தில் வரும்.

லட்சியம்

உங்களது லட்சியத்தை அல்லது நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமெனில் அது என்ன என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

முயற்சி

நீங்கள் என்னவாக விரும்பினீர்களோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். எதை நினைத்தும், பயந்தும் முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

கற்றுக்கொள்ளுங்கள்

படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள். புதிது புதிதாக எதையாவது அறிந்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எதில் விருப்பமோ அதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள முன்வாருங்கள். கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம்.

உழைப்பு

லட்சியத்தை நோக்கி கடுமையாக உழையுங்கள். உங்கள் பார்வை எப்போதும் லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். லட்சியத்தை பார்க்கும் கண்களுக்கு அதன் வழியில் இருக்கும் தடைகள் தெரியாது. அப்போதுதான் உங்கள் உழைப்பு பலனை அளிக்கும்.

தெளிவுறுங்கள்

லட்சியம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளங்கள். நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தவறுகள் மூலமாகவும் பலவற்றை கற்றுக் கொள்ளலாம். தவறுக்காக எப்போதும் கவலைப்படாதீர்கள். உங்கள் தவறுகள்தான் பல சமயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

குறுக்கீடு

உங்கள் லட்சியத்தை கெடுக்கும் வகையில் நபரோ அல்லது பொருளோ, பணமோ குறுக்கே வருவதை அனுமதிக்காதீர்கள். உங்களது அனைத்து எண்ணங்களையும் லட்சியத்தை நோக்கியே செலுத்துங்கள். உங்கள் நேரத்தை அதற்காகவே செலவிடுங்கள்.

தனித்துவம்

உண்மையாக இருங்கள். உங்களை நம்புங்கள். சுயமாக சிந்தித்து சொந்த திறமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை பின்பற்றி சென்றால் தனித்துவம் இருக்காது.

கலந்தாய்வு

எந்த மனிதனும் தனியல்ல. எங்கும் எப்போதும் ஒரு குழுவாகவே இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களையும் பேசச் சொல்லுங்கள். மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். பயிற்சி, ஊக்கம் போன்றவற்றை ஒருசேரப் பெருங்கள்.

பொறுப்பேற்பு

எப்போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். உறுதி அளித்தால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

நேர்மை, கீழ்பணிதல், பொறுப்புடன் செயலாற்றுதல் போன்றவை இல்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க இயலாது.

எனவே இவற்றை கடைபிடித்து உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள். நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லுங்கள்.

நேர நிர்வாகம்

நேர நிர்வாக இரகசியங்கள்


இன்றைக்குப் பெரும்பாலானவர்கள், 24 மணி நேரம் போதாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒன்றை முடிக்கவில்லையா என்று கேட்டால், ‘நேரமில்லை’ என்று எளிதாகக் கூறிவிடு வோர் அதிகம். ஆனால் நம்மை விட அதிக வேலைகளை, அதிகத் திறனோடு செய்பவர்கள் இருக்கிறார்கள், முக்கிய நபர்கள் பலர் ஒரேநேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்கிறார்கள். உணர்ச்சிவசப்படாமல் ஒரு நிமிடம் யோசித்தால் இது உண்மை என்பதை உணர முடியும்.
நேரத்தைத் திறமையாகக் கையாளு பவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.
இன்றைய வெற்றியாளர்கள் பலரும் நேரத்தைத் திறமையாகக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.
நேர நிர்வாகம் என்பது நேரந்தவறாமல் இருப்பது மட்டுமல்ல. பல்வேறு வேலைகளைக் கையாளுவது, எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்துவது.
சரியான நேர நிர்வாகம் என்பது எதற்கு. முதலில் முக்கியத்துவம் அளிப்பது என்று அறிந்திருப்பது.
பட்டியல் போடலாம்
பிரபல காலணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராஜீவ் மேத்தா கூறுகிறார்:
“உங்களின் இலக்கை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த நான்காண்டுகளுக்கான இலக்குகளை யும் முடிவு செய்துவிடுங்கள். வருடாந்திர இலக்குகளின் அடிப்படையில் உங்களின் அன்றாடப் பணிகளையும், வாரப் பணிகளையும் அமைத்துக் கொள்ளுங்கள்.”
வெறுமனே சொல்வதோடு நின்றுவிடா மல் தனது வருடாந்திர இலக்கை எட்டுவதில் தினசரி கவனம் செலுத்துகிறார் மேத்தா. இரவில் எந்த நேரத்துக்குப் படுக்கப் போனாலும் அதிகாலையில் தவறாது 5 மணிக்கு எழுந்துவிடுகிறார். கண் விழித்ததுமே சுறுசுறு சிந்தனையில் ஈடுபடுகிறார்.
அன்றைக்கு முடிக்கவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் கொள்கிறார். அதன்பிறகுதான் செய்தித்தாளைப் புரட்டு கிறார். இவரைப் போன்ற முறையையே பின்பற்றுகிறார், தனியார் வங்கியொன்றின் துணைத் தலைவர்:-
“அலுவலகப் பணி தொடர்பாக அன்றன்று செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும், சொந்த விஷயமாக ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும் தயாரித்துக் கொள்கிறேன். தினசரி பட்டியலை அன்றன்று நிறைவேற்றுவதால் எனக்குப் பணியில் திருப்தியையும், மாதாந்திரப் பட்டியலை நிறைவேற்றுவதால் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் என்னால் அடைய முடிகிறது” என்கிறார் இவர்.

கஷ்டமானதை முதலில் முடிக்கலாம்
எளிதானதை அல்லது தமக்கு மிகவும் விருப்பமானதை முதலில் முடிக்க நினைப்பது பலரின் பழக்கம். அது சரியல்ல என்கிறார்கள் சாதனையாளர்கள். முன்னணி துணி நிறுவனம் ஒன்றின் இயக்குநரான ராம், தான் செய்ய வேண்டிய பணிகளை நான்கு வகையாகப் பிரித்துக்கொள்வதாகக் கூறுகிறார். அவை,
‘முக்கியமானவை - அவசரமானவை’,
‘முக்கியமானவை - அவசரமற்றவை’,
‘அவசரமானவை – முக்கியமற்றவை’,
‘முக்கியமற்றவை - அவசரமற்றவை’,
‘முதல் மூன்றை முடித்ததும் தான் நான் நான்காவதில் கவனம் செலுத்துகிறேன். எளிதான வேலையை முதலில் முடிக்க நினைப்பதில்லை’ என்கிறார் ராம்.
உங்களுக்கு நீங்களே விருந்தளியுங்கள்
அவசரமான, முக்கியமான வேலைகளை முடித்துவிட்டால் அன்றைய தினத்தின் முடி வில் உங்களுக்கு நீங்களே ‘விருந்தளித்து’க் கொள்ளுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த ‘விருந்து நேரத்தின்’ மகிழ்ச்சியானது மேலும் அதைப் போல பல விருந்துகளை ‘ உங்களுக்கு நீங்களே ஈட்டிக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்கின்றனர் அவர்கள்.
சில வேலைகள் போரடிப்பதாகவும், திரும்பத் திரும்பச் செய்வதால் அலுப்பூட்டுவதாகவும் இருக் கக் கூடும். அவற்றைத் தவிர்க்கவே நினை ப்பீர்கள். ஆனால் அதற்கு மாறாக நீங் களே உங்களை ஊக்குவித்துக் கொள்ளுங்கள்.
பல அசாதாரண விஷயங்கள் வெறும் புத்திசாலித்தனம் அல்லது படைப்புத் திறனால் மட்டும் சாதிக்கப்பட்டவை அல்ல; மாறாக நல்ல வேலைப் பழக்கத்தினால் நிறைவேற்றப்பட்டவை என்பதை ஞாபகத் தில் கொள்ளுங்கள்.

ஜென் கதை

ஜென் கதை ஒன்று


ஜென் குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் ஒருவர் வந்திருந்தார்.

"ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர்.

குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார்

"தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன்" என்றார் வந்தவர்.

"நான் என்ன செய்யவேண்டும்?" என்று பணிவுடன் கேட்டார் குரு.

"குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது.உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை.அங்கு இருப்பதோ சில பிட்ச்சுக்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்க்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.

அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார்.

"அறியாமை என்ற வினைதான் காரணம்"

"அறியாமையா?" என்று வியந்தார் வந்தவர்.

"ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் உறைகிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும்" என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு.

குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக் கூறினார்.

இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இவராயிருக்குமோ? இல்லை அவரையிருக்குமோ? என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் தேவதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் தேவதூதராக இருந்தால்? என்ற கேள்வியோடு.மற்றவர்களை பரிவோடு நடத்தினர்.

இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பனிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர்.

இதனைக் கண்ட பிறகு தான் மடாலத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் பணிவுடனும் பரிவுடனும் பழகும்போது நாம் இறைத்தூதராகிவிடுகிறோம்.

கடவுள் என்பவர் எங்கும் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும்.