4/25/2012

மகான்கள் வாழ்வில் – ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்




பொதுவாக மகான்கள் செய்யும் காரியங்கள் பலவற்றிற்கும் நமக்கு முதலில் அர்த்தம் புரியாது. பைத்தியக்காரத்தனமாகத் தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் பின்னர் உண்மை புலப்படும்.
அவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்து பக்தர்களின் கர்ம வினையைத் தாம் ஏற்று, அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த மகான்களுள் மிக முக்கியமானவர் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். ‘தங்கக்கைச் சாமி’ என்றும் ‘கிறுக்குச் சாமி’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டவர். பலரது வாழ்க்கை உயர்விற்குக் காரணமாக அமைந்தவர். ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையையைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.
ஒருமுறை, தெருவில் சவ ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதனைப் பின் தொடர்ந்து சேஷாத்ரி சுவாமிகள் சென்று கொண்டிருந்தார். அருகே ஓர் மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு வீட்டில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபமுற்றனர். சிலர் திட்டினர். சிலரோ, சுவாமிகள் வந்தது நிச்சயம் நல்லதற்குத் தான் என நினைத்தவாறு அமைதியாக இருந்தனர்.
மகான் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. நேரே சமையல் அறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய அண்டாவில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. வேகமாகச் சென்றவர் அப்படியே அதைச் சாய்த்துக் கீழே கொட்டிவிட்டு, வேகமாக வெளியே ஓடிச் சென்று விட்டார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி, ஆத்திரம். சிலர் திட்டிக் கொண்டே மகானைப் பிடிக்கப் பின்னால் வேகமாக ஓடினர். பயனில்லை. மகான் எங்கேயோ போய் விட்டிருந்தார்.
மகானின் இந்தச் செய்கைக்குக் காரணம் புரியாமல், கீழே கொட்டிக் கிடந்த சாம்பாரைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி போய் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மகானை இரு கை கூப்பி வணங்கினர்.
காரணம், சாம்பாரில் ஒரு பெரிய நல்ல பாம்பு செத்துக் கிடந்தது. இதனை மகான் முன்கூட்டியே உணர்ந்து, சாம்பாரை யாரும் உண்டுவிடக் கூடாது, அதனால் ஆபத்தோ, உயிரிழப்போ நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அண்டாவைக் கவிழ்த்தார் என்பதறிந்து அவரைத் தொழுதனர்.
மகான்களின் பெருமை சொல்லவும் அரிதே!
-Partha.