12/11/2011

ஞானக் கதைகள் - புத்தர்

புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான்.அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் அமைதியாகக் கேட்டார் ,''வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா அப்பா?'' புத்தரின் உறவினரும் அவர் உடனேயே இருந்த சீடருமான ஆனந்தருக்குக் கோபம் வந்து விட்டது.''நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன்,''என்றார்.புத்தர் அவரிடம் சொன்னார்,''ஆனந்தா,நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து விட்டாயா? இதோ, இவரைப்பார் ,ஏற்கனவே, ,இவர் கோபம் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறார்.அவருடைய கோபமான முகத்தைப்பார்.அவர் உடல் ஆடுகிறது.கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறாயா? அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார்.இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்?எனக்கு என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது.இதைத் துடைப்பதைத் தவிர எனக்கு என்ன சிரமம் உள்ளது?நீ கோபப்படாதே.இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள் எல்லாம் உனக்கும் நேரும்.உன்னை நீயே ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும்?இவர் மீது கோபப்படாதே.மாறாக இரக்கப்படு.'' பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து,''அப்பா,நீ மிகவும் களைப்புடன் காணப் படுகிறாய்.உன்னை நீயே தண்டித்துக் கொண்டது போதும்.என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு.வீட்டிற்குப் போய் ஓய்வெடு,''என்றார்.அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான்.பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.புத்தர் சொன்னார்,''முதலாவதாக நான் கோபப்படவில்லை.பின் மன்னிக்க வேண்டும் என்ற கேள்வியே எழாதே? ஆனால் இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி.ஏனெனில் நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய்.மீண்டும் இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள் நீயே நரகத்தை உருவாக்கிக் கொள்ளாதே.''

ஜென் கதை

ஜென் கதை
பல போர்களை வென்ற ஒரு ராணுவத் தளபதி, தன் வீட்டில் பழமையான ஒரு கண்ணாடிப் பொருளைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அந்தப் பொருள் அவர் கையில் இருந்து நழுவிவிட்டது. ஒருகணம் தவித்துப்போன அவர் அது தரையைத் தொடும் முன் எப்படியோ பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

"எத்தனையோ ஆயுதங்களுக்கு எதிராக நின்றபோதுகூட பதைக்காதவன் இச்சிறு பொருளுக்காக ஏன் பதைத்தேன்?" என்று ஒருகணம் யோசித்தார் தளபதி.

அவர் முகத்தில் திடீர் என்று ஒரு புன்னகை முளைத்தது. அந்தக் கண்ணாடிப் பொருளை வீசி எறிந்து உடைத்தார்.

விளக்கம்:

"வாழ்க்கையின் பெரும்பான்மையான தருணங்களில் நீங்கள் ஓர் உயிராக மட்டும் உங்களைக் கருதினால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண், பெண் என்ற அடையாளங்களுடன் செயல்படுகையில்கூட சில கட்டாயங்களை நீங்களே விதித்துக்கொண்டுவிடுவீர்கள். சொல்லப்போனால், உங்களை ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்தி, அதன் மீது உங்கள் வாழ்க்கையை அமைக்கக்கூட அவசியம் இல்லை.

எல்லா அடையாளங்களையும் தாண்டி இருக்கையில்தான், உங்கள் திறன் உச்சத்தில் செயல்படுகிறது. குறுகலான வரையறைகளைத் தாண்டி காலெடுத்துவைக்கையில், நினைத்துப்பார்க்காத விஷயங்கள்கூட சாத்தியமாகின்றன.

எல்லை இல்லாத உயிரைப்போய் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். அட, மனதில் தோன்றும் எண்ணங்களுடன்கூட உங்களுக்கு அடையாளம் வந்துவிட்டது. நீங்கள் உருவாக்கிய உணர்வுடன்கூட அடையாளம் பிறந்துவிட்டது.

எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்கையில், வேதனைகள்தாம் வரும். உங்கள் பதவி, நீங்கள் கட்டிய வீடு, உங்கள் உடைமைகள், நடுவில் வந்த உறவுகள், நண்பர்கள் என்று எல்லாவற்றுடனும் ஓர் அடையாளம் உங்களைப் பிணைத்துப்போடுகிறது. அந்த அடையாளங்களுடன் சிக்கிப் போராடுகையில் தேவையற்ற பதைப்பு வரத்தான் செய்யும்.

இதேரீதியில் ஒரு சிறு கண்ணாடிக் கோப்பையுடன்கூட தன்னைத் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்திக்கொண்டுவிட்டதால் ஏற்பட்ட பதைப்பை உணர்ந்த தளபதி, அதில் இருந்து விடுபடும்விதமாக அதை வீசி எறிந்து நொறுக்குகிறார்.

நீங்கள் வீசி எறிய வேண்டியது, கண்ணாடிப் பொருட்களை அல்ல; உங்கள் அடையாளங்களை!"

            - PARTHA

12/10/2011


புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் சீடர்கள், அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.
புத்தர் தம் சீடர்களை நோக்கி “ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார்.
எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“எழுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“அறுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“ஐம்பது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்
“தவறு“ என்றார் புத்தர்.

இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள்.

சில வினாடிகள் அமைதியாக இருந்தார் புத்தர்.

பிறகு அவர் “அது ஒரு மூச்சு“ என்றார்!
“வெறும் மூச்சுவிடும் நேரம்தானா?” என்று கேட்டார் ஒரு சீடர்.
அப்படியல்ல.
வாழ்வு ஒரு கணமன்று.!
ஆனால் ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்.!
ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும்.!
கணம் கணமாக வாழவேண்டும்! என்றார் புத்தர்.

சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். நேற்றைய நினைவில் மூழ்கி இறந்தகாலத்தில் வாழ்கிறார்கள்.
சிலர் அறியப்படாத எதிர்காலத்தில், எதிர்காலக் கனவில், எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்.
அவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.
எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற அந்தகர்களாக (கண்பார்வையற்றவர்களாக) இருக்கிறார்கள்.
கணத்திற்குக் கணம், நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும்.

- PARTHA 

ஜென் கதைகள் - ஒரு பார்வை

"ஜென் ஒரு கொள்கையோ, கோட்பாடோ அல்ல. அது ஒரு தத்துவம் கூட அல்ல. "ஜென்" முறையில் வாழ்வது என்று கூட ஜென் ஞானிகள் குறிப்பிடுவதில்லை. "ஜென்"-னில் வாழ்வது என்றால் கூட அது பிழையாகும். "ஜென்"-னாக இருப்பது என்பதுதான் சரியான விளக்கம். இதற்குத் தன்னியல்பில் இருப்பது என்று பொருள். ஜென் நம்ப முடியாத அளவிற்கு இயல்பானது. இயற்கையானது. தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் சுடர் தெறிக்கும் அந்த ஒரு கணத்தில் விழிப்புணர்ச்சி சித்திக்கிறது என்கிறது ஜென். பெரும்பாலும் அதிர்ச்சியின் மூலமே ஞான தரிசனம் அருள்கிறார்கள் ஜென் குருமார்கள். மனித குலத்தைப் பிளவுபடுத்தும் மதக் குப்பைகளை வாரி எறிந்துவிட்டு, மானுடத்தை ஒன்றாக்கிவிடுகிறது ஜென்.

"ஜென்"-னின் தோற்றம்

நம்நாட்டுத் தியான முறைதான் ஜென் ஆயிற்று. இந்தியாவிலிருந்து சினாவிற்குச் சென்று, ஜப்பானில் "ஜென்" ஆயிற்று, காஞ்சிபுரத்திலிருந்து வந்த போதி தர்மர் என்ற பௌத்த குருதான் சினாவில் ஜென் பிரிவைத் தொடங்கி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அன்றைய சின பௌத்தம் தத்துவச் சிக்கல் மிகுந்ததாக இருந்தது. போதி தர்மர் அதனைச் சாதாரண மனிதனும் புரிந்துகொண்டு தியானிக்க நினைத்தார். போதி தர்மரின் ஜென் நான்கு அம்சங்களைக் கொண்டது.

1. சமய நூல்களைத் தவிர்த்து அப்பால் ஞானம் பெறுதல்.
2. வார்த்தைகளை நம்பியிருக்கும் நிலையை மாற்றுதல்.
3. மனிதனின் மனதை நேரடியாகத் தொட முயலுதல்.
4. தன் சுபாவத்தை, இயல்பை உணர்ந்து முற்றும் உணர்ந்தோன் நிலையை அடைதல்.


சினாவில் ஜென் - புத்தகம், கன்பூஷியஸ், தாவோ ஆகிய மூன்று வழிகளில் செல்கிறது. ஜென்புத்தகம் மற்ற இரண்டிலிருந்தும் வேறுபட்டது.

செய்யும் செயலே தவம்:

தவம் மேற்கொள்ள தனித்த இடம் தேடிச் சென்று கண்களை இறுக மூடி அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. செய்யும் செயலில் மனம் ஒன்றித்தலே தவம் என்கிறது ஜென். "உண்மையான அதிசயம்" என்ற கதையில் குரு பங்கிகீ சொற்பொழிவாற்றும் பொழுது வேறு பிரிவைச் சேர்ந்த பிக்கு இடையில் சப்தம் எழுப்பித் தொல்லை கொடுத்ததோடு அல்லாமல் "எங்கள் பிரிவில் குரு அதிசயம் நிகழ்த்துதல் போல நீங்களும் அதிசயம் நிகழ்த்த இயலுமா?" எனக் கேட்டார்.

அதற்குப் பங்கிகீ மறுமொழியாக "இது எல்லாம் நரித்தந்திரம்; ஜென்மார்க்கம் அல்ல. நான் பசிக்கும்போது சாப்பிடுகிறேன். தாகம் எடுக்கும்போது குடிக்கிறேன். இதுதான் நான் நிகழ்த்தும் அதிசயங்கள்" என்று பதிலளித்தார். "இதை எல்லாரும் செய்கிறார்கள் இதிலென்ன அதிசயம்" என்றார் பிக்கு.

"பலர் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள்; வேறெங்கோ மனதை அலைபாய விட்டு நான் சாப்பிடுவதையும் குடிப்பதையும் மனதை ஒரு வயப்படுத்தி ஈடுபாட்டுடன் தவமாகச் செய்கிறேன்". என்று பங்கிகீ பதிலளித்தார். செய்கின்ற செயலில் கவனம் வைத்து ஒரு முகப்படுத்திச் செய்தலே தவம் என்கிறது ஜென்.

திறனின் உச்சநிலை:

ஏதாகிலும் ஒன்றில் மிகத் திறம் படைத்தவராவது சிலரின் ஆசை. "நிபுணன்" என்ற கதையில் வரும் "சிச்சியாங்" சிறந்த வில்வித்தைக்காரன். "கான்யிங்" என்ற நிபுணனிடம் தான் சிறந்த வில்வித்தை நிபுணன் தானா என்று கேட்டறிய விரும்பிச் சென்று, அவரிடமிருந்து வில்லும் அம்பும் இல்லாமலேயே எய்யும் கலையைக் கற்றுவருகிறான்.

சிச்சியாங் ஊர் திரும்பிய பொழுது வில்லை மலையிலேயே விட்டுவிட்டு வந்திருந்தான். யாராவது கேட்டால், "செயலின் உச்சகட்டம் செயலின்மை பேச்சின் உச்ச கட்டம் மௌனம்; வில்வித்தையின் உச்ச கட்டம் வில்லை எய்தாமலிருப்பதுதான்!" என்று சொல்லுவான். ஏனெனில் வில் - அம்பு இல்லாமலேயே மிகமிக உயரத்தில் பறக்கும் பறவையைக் கூட தன் கூரிய பார்வையால் அவனால் வீழ்த்த முடியும். ஆயினும் அவன் எதுவும் அதிகமாகப் பேசிக்கொள்வதில்லை ஆகவே திறனின் உச்ச நிலை அத்திறனில் செயலற்ற தன்மையாய் இருப்பது. "உன்னத மனிதன் ஆற்றலைப் பறைசாற்றுவதில்லை. அதனால் அவன் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்கிறான். பலவீனமானவன் ஆற்றல் உடையவனாகக் காட்டிக் கொள்கிறான். அதனால் அவன் ஆற்றல் இல்லாதவனாக ஆகிறான்" என்றகிறது ஜென்.

அறிதலற்ற நிலையிலிருந்தால் அறியலாம்:

நிறையச் செய்திகளைக் கற்றும் கேட்டும் அறிந்து மூளையில் நிறைத்து வைத்திருக்கும் அறிவாளிகளை ஜென் பொருட்படுத்துவதே இல்லை. "நிரம்பிய கோப்பை" என்ற கதையில் "ஜென்" பற்றி அறிந்துகொள்ள அறிஞர் ஒருவர் ஜென் குருவிடம் சென்றார். அப்பொழுது குரு அவரை உபசரித்து அறிஞரிடம் கோப்பையைக் கொடுத்து, குரு அதில் தேநீரை ஊற்றினார். கோப்பை நிரம்பி வழியும் பொழுதும் குரு நிறுத்தவில்லை. அறிஞர், "கோப்பை நிறைந்து விட்டது. இதற்கு மேல் கொள்ளாது" என்று கூறினார். குருவும் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, "உங்கள் மனதில் வாதப் பிரதி வாதங்களும் தத்துவக் குப்பைகளும் நிரம்பியிருக்கின்றன. உங்கள் கோப்பை காலியாக இருந்தால்தான் ஜென் பற்றிய உணர்வு பெற முடியும்?" என்று கூறினார்.

நிறையச் செய்திகளை அறிந்து கொண்டு சுமந்துகொண்டு அலையாமல் இருத்தலே நல்லது என்கிறது ஜென். "ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டுமென்று அலைவதே ஒரு மனநோய்" என்கிறது ஜென்.

எண்ணங்களிலேயே சொர்க்கமும் நரகமும்:

நாம் நம்முடைய கோபம், ஆணவம், பொறாமை முதலிய எண்ணங்களைக் கைக்கொள்ளும் பொழுது வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறோம். பொறுமை, பணிவு, தன்னடக்கம் முதலிய எண்ணங்களைச் செயல்படுத்தும் பொழுது வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிவிடுகிறோம். இந்தக் கருத்தினை சொர்க்கமும் நரகமும் என்ற கதை உணர்த்துகிறது.

"சொர்க்கமும் நரகமும் உள்ளதா?" எனக் கேள்விகேட்ட சாமுராய் போர்வீரனைப் பார்த்து ஜென்குரு, "நீ போர் வீரனா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல் தெரிகிறது. எந்த அரசன் உன்னைக் காவலனாக ஏற்பான்?" என்றதும் வீரன் கோபமடைந்து வாளை உருவி முன்னேறுகிறான். குருவும் "இந்த மழுங்கிய வாளால் என் தலையை வெட்ட முடியாது" என்று கூறி "இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார். அவரின் தைரியம், கட்டுப்பாட்டு உணர்ச்சி கண்டு வீரன் வாளை உறையில் போட்டு அவரை வணங்கினான். உடனே குருவும் "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார்.

நம்முடைய நல்ல பண்புகள் அல்லது தீய பண்புகள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தோற்றுவிக்கின்றன என்பது ஜென்.

"ஜென்" மாணவர்களுக்கு "உழைக்காத நாள் சாப்பிடாத நாள்" ஆகும். ஆகவே ஜென்னில் இருப்பது என்பது செய்கின்ற செயலில் ஒருமித்து இருத்தல், அயராது உழைத்தல், ஆணவம் முதலிய தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு சாதாரண நிலையில் வாழ்தல், ஒன்றில் உச்சக்கட்டத் திறனடைதல் என்பது அச்செயலில் செயலற்ற தன்மையாய் இருத்தல் முதலியவற்றைக் கூறலாம்.
-Partha