8/22/2010

இடைவிடாத பிரார்த்தனை


பிரார்த்தனை என்பது தெய்வீகம் பொருந்தியது. மனித உழைப்பைப் போற்றாதவர் இல்லை. நட்பில் விஸ்வாசத்தைப் பாராட்டாதவரில்லை. உயர்ந்த ஞாபகசக்தியை அனைவரும் கண்டு வியப்படைவார்கள். உழைப்பு உடலின் முயற்சி; விஸ்வாசம் உணர்வின் நெறி; ஞாபகம் அறிவின் முயற்சி; இவற்றையெல்லாம் கடந்த நிலையிலுள்ளது ஆன்மா. ஆன்மா முயன்று எழுப்பும் குரல் பிரார்த்தனை. இது ஆண்டவனை எட்டும். எட்டிய க்ஷணம் அற்புதம் நிகழும். இடைவிடாத பிரார்த்தனை இறைவன் காதில் தவறாது விழும். மனித வாழ்விலுள்ள எந்தச் சிக்கலையும் அவிழ்க்கும் திறனுடையது இடையறாத பிரார்த்தனை. மூன்று நாட்கள் இடைவிடாமல் பிரார்த்தனை செய்து தீராத பிரச்சினை ஒன்றை இதுவரை நான் கேட்டதில்லை.



அன்னையைப் பற்றி பக்தர்கள் அறிந்தன அநேகம். ஆயிரம் வகைகளில் பக்தனின் துயரைத் தீர்த்தவர் அன்னை. ஆழாக்கு அரிசிகூட வீட்டில் இல்லை என்று அழுது புலம்பியவர் வாழ்வில் அன்னை உதயமாகி, நமக்கில்லை என்று மறந்துவிட்ட பெருஞ்சொத்தை, கைக்கு வந்துவிட்டது என்பதை நிறைவேற்றியவர் அன்னை. கஷ்டம் வந்து கடைசி நிலைக்குப் போனபின், அன்னை அளித்த வாழ்வு பேர்அதிர்ஷ்டமாக அமைந்ததை வர்ணித்தவர், "இதை அன்னையால் மட்டுமே கொடுக்க முடியும் என்பது எனக்குத் தெளிவாக விளங்குகிறது. எனக்குக் கிடைத்த இப்பேறு வேறு எதனாலும் இல்லை. அன்னையால்தான் என்பதை என் நெஞ்சம் உணருகிறது'' என்றார். ஹிருதயம் கோளாறாக இருக்கிறது; ஆப்ரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று 70 பவுண்ட் எடையுள்ள 30 வயதுப் பெண்மணிக்குச் சொன்ன டாக்டர், கூடவே "உனக்கு அந்த ஆப்ரேஷனில்லை. எந்த ஆப்ரேஷனும் செய்ய





முடியாது. உடலில் சதையேயில்லை'' என்று அனுப்பிவிட்டார். 300 ரூபாய் சம்பாதிக்கும் அந்தப் பெண்ணுக்கு டாக்டர் சொல்லியதைவிட முக்கியமானது ஆப்ரேஷன் செலவு. அதற்கு வழியில்லை. அன்னை ஸ்தாபனத்தில் வேலை செய்த அந்தப் பெண் பொறுப்போடும், விஸ்வாசத்துடனும் வேலை செய்தவர். அவருக்குப் புதிய நிலை ஏற்பட்டது. டெல்லியிலிருந்து அப்பெண்ணின் ஊருக்கு ஒரு புதிய டாக்டர் இதுபோன்ற சிக்கலான கேஸ்களைப் பரீட்சார்த்தமாக ஆப்ரேஷன் செய்ய வந்தார். அப்பெண்ணுக்கு இலவசமாக ஆப்ரேஷன் செய்தார். ஹிருதயக் கோளாறு நீங்கியது. பின்னர் திருமணமும் ஆயிற்று. சேவையின் உள்ளடங்கிய, செய்யாத பிரார்த்தனையின் பலன் அது. துறைமுகத்தை விட்டுப்போன கப்பல் அன்னைக்குப் பிரார்த்தனை செய்ததால், திரும்பிவந்து அழைத்துப் போனதுண்டு. ஒரு காலனியில் உள்ள எல்லா வீடுகளும் சேதமான நேரத்திலும் அன்னை படம் இரண்டு நாளிருந்த வீடும், அங்குள்ளவர்களும் அந்த அசுரச் சூறாவளியிலிருந்து தப்பும்படிக் கவசமாக இருந்தது அன்னையின் சூழல். பல ஆண்டுகள் சந்தான பாக்கியமில்லாதவர்கள் பலர்; அன்னைக்குப் பிரார்த்தனை செய்த அடுத்த மாதம் கர்ப்பமானேன் என்று சொன்னதுண்டு.

1 கருத்து: