9/27/2010

நேர நிர்வாகம் (TIME MANAGEMENT)

குறித்த நேரத்தைக் கடைப்பிடித்தல்

குறித்த நேரத்தைக் கடைப்பிடித்தல் என்பது ஒரு அரிய தேவையான குணமாகும். அதுவும் இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் தகவல் பரிமாற்றங்கள் மின்னல் வேகத்தில் இண்டர்நெட் மூலமாகவும் பேக்ஸ் மூலமாகவும் பரவும் போது குறித்த நேரம் என்பது மிக்க அர்த்தம் உள்ளதாக ஆகிறது.

போட்டி மயமான உலகில் முந்தியவருக்கே முதலிடம் என்ற நிலையில் குறித்த நேரத்தைக் கடைபிடிக்காதவருக்கு பண இழப்பும் தோல்வியும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வெற்றிகரமான வியாபாரத்தின் ஆத்மாவே குறித்த நேரம் தான் என்பர் அறிஞர்.

நேர நிர்வாகம்

நேரத்தை நிர்வகிப்பது எப்படி (TIME MANAGEMENT) என்பது ஒரு பெரிய நிர்வாக இயலாக மாறி வருகிறது. நமக்கென கிடைக்கும் மாலை நேரங்களை - அதாவது வேலைக்குப் பிறகு உள்ள நேரத்தை எப்படிக் கழிப்பது என்பதை சிந்தனை செய்து வரையறுத்துக் கொள்ளல் இன்றியமையாதது.

1. தனிப்பட்ட நேரம்

அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உள்ளார்ந்த சிந்தனையில் ஈடுபடுவது முழு வாழ்க்கை வாழ்ந்த அளவிற்கான அனுபவத்திற்குச் சமமாகும். நமது உள்ளார்ந்த சக்திகளை, திறமைகளை வெளிப்படுத்த தேவையான முயற்சிகளை பற்றி எண்ணிப் பார்க்க இந்த மாலை நேரம் உதவ முடியும்.

நம்மை பாதிக்கும் விஷயங்களில் எதிர் விளைவுகளைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவதை விட்டுவிட்டு நாம் முன்னேற உதவும் செயல்களை நினைத்து உந்துதலுடன் செயலாற்ற ஆரம்பிக்க வேண்டும்.

2. மனைவி மக்களுக்காக

மனைவியுடனும், குடும்பத்துடனும் தினமும் சற்று நேரம் செலவழிப்பது, வார இறுதியில் வெளியிடங்களுக்குச் செல்வது - இவையெல்லாம் இன்றியமையாத குடும்பப் பிணைப்பை வலுவுள்ளதாக ஆக்கும்.

3. வேலைக்காக

செய்யும் தொழிலில் திறமைகளை வளர்ப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். எந்த வேலையையும் இன்னும் சற்று சிறப்பாகச் செய்ய வழியுண்டு. அந்த வழியைக் காண நேரம் ஒதுக்க வேண்டும்.

4. உடல் நலம்

காலை, மாலையில் நடைப்பயிற்சி, தினமும் சிறிது தேகப்பயிற்சி இவற்றிற்காக 30 நிமிட நேரம் ஒதுக்குதல் நலம். நல்ல உணவுப் பழக்கம், குறித்த நேரத்தில் சாப்பிடுதல் இவற்றால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

5. நிதி நிலை

அன்றாடம் செய்த வரவு செலவுக் கணக்கைச் சரி பார்க்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். வரி செலுத்துதல், பண முதலீடுகளைப் புதுப்பித்தல், பட்ஜெட் திட்டமிடல் இவற்றிற்கு உரிய நேரம் ஒதுக்குதல் வேண்டும்.

6. சமூக உயர்வு

நாம் வாழும் குடியிருப்பை மேம்படுத்த நமக்கு ஒரு கடமை உண்டு. அதற்கு வாரம் சிறிது நேரம் ஒதுக்குவதோடு, ஏழை மக்களின் நிலை உயர்வதற்காக முயற்சி செய்ய சிறிது நேரம் தருவதும் இந்த சமுதாய கடமையில் அடங்கும். இதில் ஏற்படும் ஆத்ம திருப்திக்கு ஈடு இணை இருக்க முடியாது.

7. ஆன்ம வளர்ச்சி

உள்ள வலிமைக்கு ஆன்மீக வளர்ச்சியே அடிப்படை. இறை நம்பிக்கையோடு பிரார்த்தனை, குடும்பத்தார் விரும்பும் சடங்குகள் இவற்றிற்கு உரிய மதிப்பு தருவதோடு தனது ஆத்ம முன்னேற்றத்திற்கும் நேரம் ஒதுக்குதல் இன்றியமையாதது.

இப்படி தனிப்பட்ட நிலை, குடும்பம், சமுதாய வளர்ச்சி ஆகிய அனைத்திற்கும் நேரத்தை ஒரு வெற்றியாளரால் மட்டுமே தர முடியும். வெற்றியாளர்களைக் கூர்ந்து கவனித்தால் நேரத்தை எவ்வளவு கவனமாக பயன்படுத்தி தம் கொள்கையைக் கடைப்பிடித்து குறிக்கோளை நிறைவேற்றுகின்றனர் என்பது புரியும்.

நேர நிர்வாகம் என்பது உண்மையில் சொல்லப் போனால் தன்னைத் தானே நிர்வகிப்பது ஆகும். அது ஒரு சிந்தனை முறை. முக்கியத்திற்கு முதலிடம் கொடுத்து (First Things First) தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் வாழ்க்கை முறை!

இன்றே இப்பொழுதே

எல்லையற்ற கால வெள்ளத்தில் "இன்று" என்பது எவ்வளவு முக்கியமானது! நேற்றைய நாள் சென்றது தான்; திரும்பி வராது. நாளைய நாளைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் இன்றோ கையில் கிடைத்த பொன்; அதை செவ்வனே பயன்படுத்தும் பழக்கத்தினாலேயே வெற்றிப்படிகளில் ஏறி விடலாம்.

3 கருத்துகள்: