9/25/2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்

ஒரு தலைவர் தொலைநோக்குப்
பார்வையில், திட்டமிடவும்,
தொண்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி
தரமாகச் செயல்படவும், பல்வேறு
குணநலன் கொண்டவர்களை
ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக
இயங்கிடச் செய்யவும், அவ்வப் போது
ஆய்வு செய்து, அறிக்கைகள் மூலம்
நிவர்த்தி செய்து, வரவு செலவு திட்டத்தில்
தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும்.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்”.
நிலைபெற்ற படைவீரர் பலர் இருந்தும், தகுந்த படைத்தலைவர் இல்லாத தானை, இருந்தும் இல்லாதது போல்தான் என படைமாட்சி அதிகாரத்திலே, நம்முடைய தெய்வப்புலவர் மிகத்தெளிவாக, தலைமை குறித்து குறிப்பிடுகிறார்.
ஒரு நிறுவனத்தின் தலைவர், ஒரு பள்ளி யின் தலைமையாசிரியர், ஒரு அரசாங்கத்தின் அமைச்சர், மற்றும் பல்வேறு வகைப்பட்ட மக்களை ஒன்று திரட்டி ஒரு பணியில் ஈடுபடுத்தி வேலை வாங்கும் தலைவர். “இப்படி நடத்து கொண்டால் நல்லது” என்று உடன் வேலைபார்ப்பவர்கள் விரும்புவதை நான் இங்கே சொல்ல வரவில்லை. மாறாக, நீதிநூல்கள், நிர்வாகத்துறை நூல்களை உலக அறிஞர்கள் ஆராய்ந்து அறிந்து, நல்ல முறையில் எப்படி நிர்வாகம் செய்வது என்பதற்குக் கண்ட பல வழிமுறைகளில், ஒரு சிலவற்றை இதன் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதே என் நோக்கமாகும்.
“தலைவர்” நடுநிலைக் கொள்கை உடையவராக இருக்க வேண்டும். அப்படி உடன் இருப்பவர்கள் எல்லாரும் உணரும்படி நடந்து கொள்ள வேண்டும். “நியாயமானதைச் செய்வார்” என்ற பெயர் நிலைத்து விட்டால் பின்னர் ஒரு செயலைத் தனக்காக முயன்றும் முடியாமற் போனாலும் கூட அவர் செய்திருப்பார் முறையாக இருந்திருந்தால்” என்று உடன் வேலை செய்வோர் தம்மைத்தாமே சமாதானம் செய்து கொள்வார் களே அன்றிக் குறைகூற மாட்டார்கள்.
ஒரு தலைசிறந்த தலைமைக்கு
தேவையான திறமைகள்
1. திட்டமிடுதல் – Planning
2. வடிவமைத்தல் – Organising
3. நியமித்தல் – Staffing
4. இயக்குதல் – Directing
5. ஒருங்கிணைத்தல் – Co-ordinating
6. அறிக்கை அளித்தல் – Reporting
7. வரவு செலவு திட்டமிடல் – Budgeting
ஒரு தலைமை, வெற்றிகரமான, தீர்க்கதரிசனமான, முடிவை எடுக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்:
1. எடுக்கப்போகும் முடிவை குறித்த நோக்கங்கள் தெள்ளத் தெளிவாக இருத்தல் வேண்டும்.
2. முடிவு எடுத்தலுக்கு தேவையான தகவல்கள் மிகச் சரியாகவும், போதுமானவையாகவும் இருக்க வேண்டும்.
3. புதுப்புது மாற்றுத் தீர்வுகளை உருவாக்கத் தயங்கக்கூடாது.
4. எடுக்கப்படும் முடிவு மாற்றம் செய்யக் கூடிய வகையில் அமைதல் வேண்டும்.
5. எந்த பிரச்சனைக்கும் முடிவு காணும் போது அதை செயல்படுத்தும் போது, அதற்கு சம்பந்தப்பட்டவைகளுடன் கலந்தலோசிக்க வேண்டும்.
6. முடிவுகள் முறையாக அறிவிப்பூர்வமாக, தெளிவானதாக, சம்பந்தப்பட்டோர் அனைவருக்கும் புரியுமாறு அறிவிக்க வேண்டும்.
7. தீர்வுகளுக்கு போதிய நேரம் கொடுத்து, காலக்கெடுக்குள் நிறைவேற்றவேண்டும்.
8. முடிவுகள் சரிவர நிறைவேற்றப் படுகின்றதா என்பதைப் பின் தொடர்ந்து பார்க்க வேண்டும்.
தலைமை : வெற்றிகரமான, கமிட்டி அமைப்புக்கான வழிவகைகள்
1. ஒவ்வொரு கமிட்டியின் நோக்கமும் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும். இது எழுத்துவடிவில் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்கும். காலவிரயம் இருக்காது.
2. கமிட்டியின் அதிகாரவரம்பு நிர்ணயிக்கப் படுதல் இன்றியமையாதது, அதன் அதிகாரம், ஆய்வு செய்வதற்கா, ஆலோசனை வழங்குவதற்கா, பரிந்துரை செய்வதற்கா, அல்லது முடிவு எடுத்து செயல்படுவதற்கா என்பதை முன்னமே தீர்மானிக்க வேண்டும்.
3. கமிட்டி மூன்றுபேர் கொண்டிருந்தால் அதிலே இருவர் சேர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துவர், மாறாக 10, 15 பேர் கொண்டு அமைத்தால் அது சந்தைக்கடையாகி விடும். வெற்றிகரமான கமிட்டி என்பது ஐந்து நபர்கள் கொண்ட அமைப்பானதாகும்.
4. கமிட்டியின் தலைவர் மிகவும் கவன மாகத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். அவர் தீர்க்கமாகத் திட்டமிட்டு, நிகழ்ச்சிநிரல் தயாரித்து, உரிய காலத்தே, உறுப்பினர்களுக்குப் போதிய தகவல்கள் தந்து, கூட்டத்தை செவ்வனே நடத்தினால், குறைகள் பல களையப் படும். தலைவர்தான் கூட்டத்தின் சுருதியை, சரியாக சேர்க்கவும், விவாதம் தடம்புறளாமல் இருக்கவும், கருத்துக்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்லவும் முடியும்.
5. தலைவர் போன்றே கமிட்டி உறுப்பினரும் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். ஏன் என்றால், வெற்றி அவர்களின் தகுதி, திறமை, நேர்மையை பொறுத்தே அமைகிறது. அவர்களுக்கு, கருத்து சமரசம் செய்து கொள்ளாமல், தீர்மானிக்க உதவும். விவேகம் இருத்தல் வேண்டும். பிறர் புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
6. கமிட்டி அமைப்பின், செலவுக்கு ஏற்ற, பயன் இருத்தல் மிக, மிக முக்கியம்.
7. கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிதல் வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும், விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். மாற்றுக்கருத்துக்கு இடமளித்தல் மிக முக்கியம்.
8. கமிட்டி அமைப்பின் செயல்பாட்டை அவ்வப்பொழுது, மதிப்பீடு செய்தல் வேண்டும். பயனற்ற கமிட்டியை கலைத்து விட தயங்கக்கூடாது. கமிட்டி யின் பரிந்துரைகளும், தீர்மானங்களும் நடை முறைப்படுத்தப்படுகிறதா என கண் காணிக்க வேண்டும்.
9. கமிட்டியின் செயலர், பல்திறன் கொண்டவ ராகவும், நிலையாகப் பணி செய்யக்கூடிய வராகவும், நேர்மையுடையவராகவும், இருப்பது அவசியம். அவரால்தான் கமிட்டி யின் செயல் பாட்டை செவ்வனே கவனிக்க இயலும். கமிட்டிக்கு ஸ்திரத்தன்மையை கொடுப் பதும் அவர்தான்.
ஒரு திறமையான அமைப்புக்கான அடையாளங்கள்
1. சரியான வேலையை, சரியான நபர் கொண்டு, சரியான இடத்திலிருந்து, சரியாகச் செய்வதற்கான, தளத்தையும் களத்தையும், அமைத்துக்கொடுத்தல்.
2. அதிகாரம் பரவலாக்கப் படுவதற்கு சாதகமாக இருத்தல், அதாவது அமைப்பு இயந்திரமாக இயங்காமல், உயிர் துடிப்புள்ள உடல்போல் செயல்படல் வேண்டும்.
3. வள ஆதாரங்களான, மனிதவளம், நிதிவளம், பொருள்வளம், மூலதனவளம், போன்றவை முழுமையாகப் பயன்படுத்து வதற்கு, ஏற்றதாக இருத்தல். நவீன தகவல் தொழில்நுட்பம் பயன்பாடும், மாற்றங் களுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும்படியும் அமைதல் வேண்டும்.
4. அமைப்பின், அதிகாரமும், கடமையும், பொறுப்பும், சுதந்திரமாகப் பிரயோகிக் கப்படும்போது பணியாளர்களின் படைப்பாற்றல் பன்மடங்கு பெருகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு தலைவர் தொலைநோக்குப் பார்வையில், திட்டமிடவும், தொண்டர்களுக்குத் தன்னம் பிக்கை ஊட்டி தரமாகச் செயல்படவும், பல்வேறு குணநலன் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, ஆக்கபூர்வமாக இயங்கிடச் செய்யவும், அவ்வப் போது ஆய்வு செய்து, அறிக்கைகள் மூலம் நிவர்த்தி செய்து, வரவு செலவு திட்டத்தில் தேர்வு பெற்றவராக இருத்தல் வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று!
என்ற வள்ளுவப் பெருந்தகையின், நெறி தவறாதவராக இருப்பவரே மிகச் சிறந்த தலைவராவர்.

நன்றி:-  ஏ.ஜி. மாரிமுத்துராஜ், தன்னம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக