9/21/2010

ஆழ்வார்கள்

முதலில் ஆழ்வார் என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.
பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொல்வார்கள். பகவான் விஷ்ணுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எதிலும் தீவிரமாக ஆழ்பவர்களை ஆழ்வார் என்று அழைக்கலாம். துக்கத்தில், துயரத்தில், சந்தோஷத்தில் ஆழ்வாரும் உண்டு. ஏ.கே. ராமானுஜன் ஆழ்வார் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த புத்தகத்துக்கு Hymns for the Drowning என்று பெயர் வைத்தார். வெள்ளத்தில் மூழ்குபவர்களுக்கான பாடல்கள் என்று. பக்தி வெள்ளம்.
'ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்' என்று திருமழிசையாழ்வாரே நான்முகன் திருவந்தாதியில் சொல்லியிருக்கிறார். நான் சொல்லப் போகும் ஆழ்வார்கள் தனிச் சிறப்புள்ளவர்கள்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் அருமையான வைணவ நூலின் பாடல்களை இயற்றியவர்கள். ஒரே ஒரு பாடலை முதலில் மாதிரி பார்ப்போம்.

நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை

ஏழாம் நூற்றாண்டில் - எழுதப்பட்ட இந்த வெண்பாவின் அற்புதம் ஏறக்குறைய உங்களுக்குப் புரியும் என்று எண்ணுகிறேன். கடவுளைப் பார்த்து,

நீதான் எல்லா உலகமும்.
பூமியில் நிலைத்திருப்பவை யெல்லாம் உன்அருள்.
நீதான் தேவர்களுக்கெல்லாம் தேவன்.
நீதான் நெருப்பு, நீதான் மலை, நீதான்
எட்டுத் திசைகளும்
நீதான் சூரியன் சந்திரன்.

இவ்வகையிலான அபாரமான நாலாயிரம் பாடல்களைக் கொண்டது திவ்வியப் பிரபந்தம் - அவைகளைப் பாடிய ஆழ்வார்கள் பற்றியது இந்தக் கட்டுரைத் தொடர்.
ஆழ்வார்கள் பத்துப் பேர். அவர்கள் பெயர்கள் இவை : பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், இவர்களுடன் விஷ்ணுவை நேரடியாகப் பாடாமல் நம்மாழ்வாரைப் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடிய மதுரகவியாழ்வாரையும் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடிய பெண்பாற் புலவரான ஆண்டாளையும் சேர்த்துக் கொண்டு ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர் என்று சொல்வதும் உண்டு. பெண்களையும் ஆழ்வார் என்று குறிப்பிடும் பழக்கம் - பழந்தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. ஆழ்வார் பராந்தகன், குந்தவைப் பிராட்டியார், மதுரகவியாழ்வார்.
குலோத்துங்க சோழன் மகளார் அம்மங்கையாழ்வார் போன்ற சோழ சாசனங்களிலிருந்து, இந்தச் சொல் இருபாலார்க்கும் பயன்பட்டது என்பது தெரிகிறது. ஆண்டாள் என்னும் பெயரில் - ஆள் என்பதே ஆழ்வாரின் - பகுதி என்று எண்ண வைக்கிறது.
ஆழ்வார் என்கிற சொல்லை ஜைன, பௌத்த ஞானிகளுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக மயித்திரியாழ்வார் என்று புத்ததேவர்க்குப் பெயருள்ளதைத் தக்கயாகப் பரணி என்னும் நூல் சொல்கிறது. அவிரோதியாழ்வார் என்று ஒரு ஜைன முனிவருக்குப் பெயர் இருந்திருக்கிறது.
ஆழ்வார் என்ற பட்டம், நேரடியாகக் கடவுள் என்கிற பொருளிலும் - ஆழ்வார் திருவரங்கத் தேவர்- என்று சோழ சாஸனங்களில் வருகிறது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை இயற்றிய ஆழ்வார்கள் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. சங்க காலத்துக்குப் பிற்பட்டும் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் காலத்துக்கு முற்பட்டும் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். இவர்கள் காலத்தைப் பற்றிப் பின்னால் விவரமாகச் சொல்லப் போகிறோம்.
இவர்கள் ஒரே குலத்தை சேர்ந்தவர்களும் இல்லை. முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் 'அயோநிஜர்கள்' என்று விவரிக்கப்படுகிறார்கள். இவர்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள் என்பதும் பிற்பாடு ரிஷிகளாக இருந்தவர்கள் என்பதும் தெரிகிறது. திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பது அவர் பாட்டிலிருந்தே தெரிகிறது.
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
என்று அவரே சொல்லிக் கொள்கிறார். பெரியாழ்வார் வேயர் குல அந்தணர் (மூங்கிலைச் சார்ந்த பார்ப்பனக் குடியினரை வேயர் என்று சொன்னார்கள்). பெரியாழ்வாரால் ஒரு துளசித் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, ஆண்டாள். திருமங்கையாழ்வார் கள்வர் குலத்தைச் சார்ந்தவர். குலசேகர ஆழ்வார் சேரநாட்டு அரச குலத்தைச் சார்ந்தவர். திருப்பாணாழ்வார் அந்திம வம்சம் பஞ்சம குலம் என்று அப்போது அழைக்கப்பட்ட பாண வம்சத்தில் பிறந்தவர். தொண்டரடிப் பொடியாழ்வார் பிராமணர். நம்மாழ்வார் வெள்ளாள சிற்றரசர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் மாணாக்கரான மதுரகவி, பிராமணர். இவ்வாறு எல்லாக் குலங்களிலும் ஆழ்வார்கள் இருந்திருக்கிறார்கள்.
சாதி வித்தியாசம் பார்க்காமலிருப்பது வைணவக் கருத்துக்களில் தலையாயது. அந்தணருக்கான கிரியைகள் அவர்களுக்கு முக்கியமில்லை. அவைகளைப் புறக்கணித்தார்கள் என்பதற்குக்கூட ஆதாரம் இருக்கிறது. அந்தணரான தொண்டரடிப் பொடியாழ்வார்,

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள்
அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்

- என்று சொல்லும்போது தினம் குளிப்பதும் மூன்று முறை அக்கினி ஹோத்திரம் செய்வதும் போன்ற rituals முக்கியமில்லை என்பதை வலியுறுத்துகிறார்.
முதலாழ்வாரான பொய்கையாழ்வார்,

புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?

- என்று பாடும்போது பகவானை மனத்தால் நினைக்காமல் வேறு மந்திரங்களை உருப்போட்டுச் செய்யும் சந்தியாவந்தனத்தால் பயனே இல்லை என்று கூறுகிறார். ஆரம்பத்திலிருந்தே சடங்குகள் முக்கியமில்லை என்கிறது வைணவம்.
தொண்டரடிப் பொடியாழ்வார்,

இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின்

- என்று வைணவராக இருந்தால் போதும்; குலம் முக்கியமில்லை; அவர்களைத் தொழுது அவர்களுக்குக் கொடுக்கலாம், கொள்ளலாம் என்கிற சாதியற்ற வைணவத்தின் ஆணிவேர் ராமானுஜர் காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் நம்மாழ்வார்,

''குலத்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு
ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே''

எத்தனைதான் கீழான சாதியராக இருந்தாலும் சக்கரத்தை வலது கையில் வைத்திருக்கும் விஷ்ணுவின் ஆள் நான் என்று உள் கலந்துவிட்டால், அவர்களின் அடியவர்களுக்கு அடியவர் நாங்கள் என்று கூறும் இந்தக் குரல் எட்டாம் நூற்றாண்டிலேயே சாதி பாராட்டாத பக்திக் குரல்.
பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களின் வரிசைக் கிரமம் அவைகளைத் தொகுத்த நாதமுனிகள் அமைத்தது. இக்கட்டுரைத் தொடரில் அந்த வரிசையைப் பயன்படுத்தினால் - ஒரே ஆழ்வாருக்குப் பலமுறை திரும்ப வரவேண்டியிருக்கும். அதனால் ஆழ்வார்கள் வாழ்ந்த கால வரிசைப்படி அவர்கள் பாடல்களையும் தத்துவங்களையும் விளக்க முற்படுகிறேன். இக்கட்டுரையில் உள்ள வைணவக் கருத்துக்கள் யாவும் பெரிய மகான்களும் உரையெழுதியவர்களும் வியாக்யானக்காரர்களும் கொடுத்த கருத்துக்கள். என் சொந்தக் கருத்துக்கள் அங்கங்கே இருப்பின் அதை நான் தனியாகக் குறிப்பிடுகிறேன். பிரபந்தத்தில் என் ஈடுபாடு நான் ஒரு வைணவன் என்கிற கோணத்தில் மட்டும் இல்லை. அதன் தமிழ் நடையும் சொற் பிரயோகங்களும் என் எழுத்துத் திறமைக்கு வலுவான பின்னணியாக இருந்திருக்கின்றன. பிரபந்தத்தில் குறிப்பாக நம்மாழ்வார் திருவாய் மொழியில் உள்ள பிரபஞ்சக் கருத்துக்கள் இயற்பியல் காஸ்மாலஜி கருத்துக்களுடன் ஒத்துப் போவதை ஓர் அறிவியல் உபாசகன் என்ற முறையில் வியந்திருக்கிறேன். அந்த வியப்புக்களையும் உங்களுக்குக் கொடுக்க முயல்கிறேன். உதாரணமாக -
நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்று இவ்வாறு துவங்குகிறது.

ஒன்றும்தேவும் உலகும் உயிரும் யாதுமில்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர்
உலகோடு உயிர் படைத்தான்

ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஒரு கட்டுரையில் (The Origin of the universe),
Although Science may solve the problem of how the universe began, it cannot answer the question why does the universe bother to exist என்கிறார். அதற்கு ஆதிகாரணமாக ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என்பதை அறிவியலாளர்கள் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள். எதுவுமே இல்லாத, காலம் கூடத் துவங்காத அந்த முதற் கணத்திற்கு முற்பட்ட நிலையைப் பற்றி இயற்பியல் Singularity என்கிறது. நம்மாழ்வாரும் அதைத்தான் சொல்கிறார்.
இந்த முன்னுரையுடன் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாரின் முதல் பாடலைப் பார்ப்போம்.

வையம் தகளியா(ய்) வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே

என்று கம்பீரமான மிகப் பெரிய விளக்கு ஒன்றை ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.
உலகம்தான் அகல், கடல்தான் நெய், சூரியன்தான் ஒளிப்பிழம்பு, இம்மாதிரியான பிரம்மாண்டமான விளக்கை சக்கரம் ஏந்திய விஷ்ணுவின் பாதத்தில் ஏற்றி, சொற்களால் ஒரு மாலை அணிவித்தேன், என் துன்பக்கடல் எல்லாம் நீங்குக என்று.
இதைச் சொல் மாலை என்பது எத்தனை பொருத்தமானது!
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஆளுக்கு நூறு பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அவை அந்தாதி என்னும் வடிவில் உள்ளன. அதாவது, முதல் பாடலின் கடைசி வரியில் அடுத்த பாடலின் ஆரம்ப வார்த்தை இருக்கும். இப்படிச் சொற்களை மாலை போன்று தொடுக்கிறார்கள் மூவரும். அதில் விசேஷம் நூறாவது பாட்டின் கடைசி வார்த்தை முதல் பாட்டின் முதல் வார்த்தை. உதாரணமாக முதல் பாடல் 'வையம்' என்று ஆரம்பிக்கிறது. 'என்று' என்பதில் முடிகிறது. அடுத்த பாட்டு - 'என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது' என்று துவங்குகிறது. பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியின் நூறாவது பாடல் மாயவனை மனத்து வை என முடிகிறது! மாலை ஒரு சுற்று முற்றுப் பெற்று விட்டதல்லவா?
வைணவ சம்பிரதாயத்தின் கருத்துக்களைப் பரப்பும் பெரியோர்களை ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என்று இரு வகைப்படுத்துவார்கள். இவர்களில் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர். ஆசாரியார் என்போர் ஆழ்வார்களுக்குப் பிற்பட்டவர்கள். பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் இவர்களில் முதலானவர். ஆழ்வார்கள் சொன்ன வழியைப் பின்பற்றி வைணவக் கருத்துக்களை நாட்டில் பரப்பி நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் ஆசாரியார்கள். இன்றைய நாட்களில் கூட ஒவ்வொரு வைணவனுக்கும் ஒரு ஆசாரியர் இருப்பார். அவரிடம் தத்துவ விளக்கங்கள் கேட்டறியலாம். இந்த மரபு தொடர்கிறது.
ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் உள்ளன.
டாக்டர் மு.இராகவையங்கார் அவர்கள் எழுதிய ''ஆழ்வார்கள் கால நிலை'' என்கிற புத்தகம் முதன்மையானது. அதில் வரும் கருத்துக்கள் அத்தனையுடனும் ஒத்துப் போக முடியாவிட்டாலும் ஐயங்காரின் ஆராய்ச்சி முறை விஞ்ஞானபூர்வமானது.
வைணவ வரலாறுகள் அவ்வளவாகச் சரித்திர உண்மையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கருடவாகன பண்டிதர் என்பவர் ராமானுஜரின் காலத்தவர். அவர் சமஸ்க்ருதத்தில் 'திவ்ய சூரிசரித்திரம்' என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதிலும் பின்பழகிய பெருமாள் சீயர் என்பவரால் ஆக்கப்பட்ட ஆறாயிரப்படி குருபரம்பரை என்கிற, சமஸ்க்ருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாள நடையில் எழுதப்பட்ட, நூலும் ஆழ்வார்களின் பிறந்த தினங்கள், அவர்கள் வாழ்வின் சம்பவங்களை விவரிக்கின்றன.
ஆனால், நவீன ஆராய்ச்சி முறைப்படி உணர்ச்சியும் பக்தியும் கலந்த இந்தக் கதைகளை சரித்திரச் சான்றுகளாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் உள்ளது. எனவே, ஆழ்வார் பாடல்களிலேயே கிடைக்கும் அகச்சான்றுகளிலிருந்தும் மற்ற, பக்தி சாராத இலக்கண இலக்கிய நூல்களின் மேற்கோள்களிலிருந்தும் தற்செயலான வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் ஆழ்வார்கள் காலத்தை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக