11/29/2012

ஜென்

   போதி தர்மர் ஒருமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருக்கிறார். சின் மோன் சில பிக்குகளுடன் அம்மரம் அருகே வருகிறான். போதி தர்மர் தியானத்தில் இருப்பதைப் பார்த்தவாறே, "உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். தாமரை சேறுநிறைந்த குளத்தில் மலர்கிறது. நாம் மலரை மட்டுமே பார்த்து பறிக்கவேண்டும். சேறு நம் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்கிறான்சின் மோன்.

"உங்க பேச்சு உண்மையை உணர்த்துவதாக உள்ளது. மலரை சேறில்இருந்து எடுப்பதென்பது.. நன்மையை எடுத்துக் கொண்டு தீமையை விட்டுவிடவேண்டும். அற்புதம்!! அற்புதம்!!" என்கிறான் சின் மோனின் இடதுப் புறமிருக்கும் பிக்கு.

"அனைத்தும் விதிப்படியே வளர்கிறது. தாமரை சேறில் இருந்து தோன்றுகிறது எனில் அந்தச் சேறும் நல்லதாகவே இருக்கும்" என்று கண்களைத் திறக்காமலேயே சொல்கிறார் போதி தர்மர்.

"என்ன? சேறு எப்படி நல்லது ஆகும்?" என்கிறான் சின் மோன்னின் இடதுப் புறமிருக்கும் சீடன்.

"நீங்கள்சொல்வதைப் பார்த்தால்.. அனைத்து தீமைகளிலும் ஒரு நன்மை இருக்கும் என்பதுபோல் உள்ளது. என்னத் தத்துவம் இது?" என்று கேட்கிறான் சின் மோன்.

மெல்ல கண்களைத் திறக்கும் போதி தர்மர், "நன்மை தீமை என எதுவும் இல்லை. எல்லாம் மனதைப் பொருத்தது" என்கிறார்.

"அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்" என்கிறான் ஒரு பிக்கு.

"என்ன அர்த்தத்தை நீ பெருசா பார்த்துட்ட!?" என்று அந்த சீடனை அடிக்க கையை ஓங்குகிறான் சின் மோன்.


"ம்ம்.."என்று அழுத்தமாக கண்டிப்பது போல் சப்ததித்து விட்டு, "கையை உயர்த்திய பின்முஷ்டியை மடக்கினாயா? முஷ்டியை மடக்கிய பின் கையை உயர்த்தினாயா?
" என்று நிதானமாக சின் மோன்னைக் கேட்கிறார் போதி தர்மர்.

சின்மோன்னின் இடதுப் புறமிருக்கும் பிக்கு தன் கையைப் பார்த்தவாறு, "இது கோழிமுதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா கதை மாதிரி இருக்கு"என்கிறான்.

பிக்குகள் தங்களுக்குள், முட்டை தான் முதலில் வந்தது என்றும்.. கோழி தான் முதலில் வந்தது என்றும் விவாதித்துக் கொள்கிறார்கள்.

"முன்பு, பின்பு என்ற ஒழுங்கு முறை எதுவும் இல்லை. இரண்டுமே சரி தான். அது விளைவுகளையும், சூழலையும் பொறுத்தது."

"எனக்குப் புரிந்து விட்டது" என்கிறான் சின் மோன்னின் வலதுப் புறம் இருக்கும் பிக்கு.

"உனக்கு புரிந்து விட்டதா? என்னப் புரிந்து விட்டது?" என கேட்கிறான் சின் மோன்.

"அனைத்துமே விளைவுகளையும், சூழலையும் பொறுத்தது. நாம் பிடிவாதமாக இருக்கக் கூடாது. விதியின் வழி செல்லணும்."

போதி தர்மர் ஆமோதிப்பது போல் தலையசைக்கிறார்.


சின் மோன், "எனக்கு எதுவும் புரியவில்லை" என்கிறான்.

"உனக்கு புரிய வைக்கும் ஆள் ஒருவரை நீ தேடிக் கொள்" என்கிறார் போதி தர்மர்.

"ம்க்கும்.. அது நீங்க தான் என நினைத்துக் கொண்டிருந்தேன்" என்கிறான் சின் மோன் அலட்சியமாக.

"அது நான் இல்லை. நீயே தான்" என எழுந்து செல்கிறார் போதி தர்மர்.

திடுக்கிடும்சின் மோன் அவர் பின்னால் சென்று, "நீங்கள் நிறைய படித்தவர். உங்கள்மரணத்திற்குப் பின், எங்கே செல்வீர்கள் எனத் தெரியுமா!?" என்று கேட்கிறான்சின் மோன்.

நின்று நிதானமாக, "எனக்குத் தெரியாது" என்கிறார் போதி தர்மர்.

"பார்த்தீர்களா உங்களுக்குத் தெரியாததும் ஒன்று இருக்கிறது" என்று சிரிக்கிறான் சின் மோன் மடக்கி விட்ட மகிழ்ச்சியில்.

"ஆமாம். ஏனெனில் நான் இதுவரை இறந்ததில்லை."

சின் மோன் வாயடைத்து போய் நிற்கிறான்.

அம்மடத்தில் தியான அறை ஒன்றுள்ளது. அவ்வறை வாசலில் ஒரு பிக்கு நின்றுக்கொண்டு, "உள்ளே சென்று பேசக் கூடாது" என உள்ளே செல்பவர்களிடம் எல்லாம்சொல்கிறார். போதி தர்மர் அவ்வறையை முன் நின்று பார்க்கிறார். மூன்று பகல்,மூன்று இரவுகளுக்கு சேர்ந்தாற் போல் தியானம் செய்ய இவ்விடம் என்கிறார்போதி தர்மரிடம் வாசலில் நிற்கும் பிக்கு. வாசலில் நிற்பவரை வணங்கி விட்டுபோதி தர்மர் தியான அறைக்குள் செல்கிறார். அவ்வறைக்குள் சின் மோன்னும்இன்னும் மூன்று பிக்குகளும் அமர்ந்துள்ளனர்.

இரவு வருகிறது. எங்கும் நிசப்தம் நிலவுகிறது. தூங்கி வழியும் பிக்கு ஒருவன் திடுக்கிட்டு விழிக்கிறான். குற்ற உணர்வில் அனைவரையும் ஒருமுறைப் பார்க்கிறான். எதிரில் அமர்ந்திருப்பவனின் முகம் தூக்க ரேகைகளுடன் சலனமுற்று காணப் படுகிறது. 'தான் மட்டும் தூங்கவில்லை' என்ற திருப்தியில் கள்ளப் புன்முறுவல் செய்தவாறு மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறான். காற்று பலமாக வீச சாளரக் கதவுகள் திறந்து மூடுகின்றன. அறைக்குள் இருக்கும் விளக்கு அணைகிறது.

அப்பொழுது தான் கண்களை மூடிய பிக்கு, "ஐய்யோ.. விளக்கு அணைஞ்சிடுச்சே!!" என்கிறான்.

அருகில் அமர்ந்திருக்கும் பிக்கு, "ஏன் நீ பேசின!?" என்று கண்டிக்கிறான்.

"நாம இப்படிப் பேசக் கூடாது!!" என்று சொல்லி விட்டு, பேசியதற்காக திடுக்கிடுகிறான் சின் மோம்.

"ஹாஹாஹா.. நான் மட்டும் தான் பேசலை" என்று உற்சாகமாக சொல்கிறான் தூங்கியவன் முன் அமர்ந்திருந்த தூக்கக் கலக்க பிக்கு. மூவரும் அவனை முறைக்கின்றனர். (படத்தில் இடம்பெறும் இந்தக் காட்சி அடிக்கடி கையாளப்படும் ஜென் கதை).

போதி தர்மர் வழவழப்பான கல் ஒன்றை மேசை மீது தேய்த்துக் கொண்டிருக்கிறார்.

"நீங்கள் என்னச் செய்கிறீர்கள்?" என்று கேட்கிறான் பிக்கு ஒருவன்.

"நீங்கள் என்னச் செய்கிறீர்கள்?!" என்று போதி தர்மரும் அதே கேள்வியைக் கேட்கிறார்.

"நாங்கள் புத்தராக தியானம் பண்றோம்" என்கிறான் தூக்க கலக்க பிக்கு.

"நான் இக்கல்லை உரசி, பளபளப்பான கல்லாக மாற்ற முயல்கிறேன்."

"எப்படி கல்லை உரசினால் கண்ணாடி ஆகும்!?" எனப் புன்னகைக்கிறான் சின் மோன்.

"கல்லில் இருந்து கண்ணாடி வராதெனில்.. நீங்கள் மட்டும் எப்படித் தியானத்தில் அமர்ந்து புத்தர் ஆவீர்கள்!?"

"புத்தர் ஆக நாங்க என்னச் செய்யணும்?"

"முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள். புத்தர் என எதுவும் இல்லை.வெறுமென அமர்ந்து அதன் விளைவுகளைப் பற்றி அறியாமல் இருந்தால்.. அகஒளிக்கான பாதையை அடையவே மாட்டீர்கள்" என்கிறார் போதி தர்மர்.

"அக ஒளிக்கான பாதையை அடைய என்னச் செய்யணும்?"

"முதலில் இருந்து தொடங்குங்கள்."

"எது முதல் (தொடக்கம்)?"

"மனம் தான் தொடக்கம்" என இடைவெளி விட்டு, "அனைத்து நன்மை, தீமை மற்றும்சரி, தவறு மனதிலிருந்தே கிளை விடுகின்றன. இதைப் புரிந்துக் கொள்ளாவிடில்..உங்க முயற்சிகள் எல்லாம் பாழே!!" என்று எழுந்து சென்று விடுகிறார். அவரைமேலும் கேள்விகள் கேட்க முயலுகின்றனர் பிக்குகள்.

இந்தப் பிக்குகளிடம் கொஞ்சம் அதிகமாகவே போதி தர்மர் பேசி விட்டதாக தோன்றுகிறது. போதி தர்மர் போதி தாராவாக இருந்த பொழுது அவருக்கு இத்தகைய வாய்ப்பை அவர் குரு ப்ரஜ்ன தாரா அளிக்கவே இல்லை.
'மனம் தான் அந்தக் குடில்!!' என ஆய்ந்தறிந்தே
போதி தர்மர் உணர்ந்தார். பொதுவில் நீங்கள் எந்த ஜென் குருவிடம் சென்று புத்தர் (கடவுள்) பற்றிக் கேள்விஎழுப்பினால்.. அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

4/25/2012

மகான்கள் வாழ்வில் – ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்




பொதுவாக மகான்கள் செய்யும் காரியங்கள் பலவற்றிற்கும் நமக்கு முதலில் அர்த்தம் புரியாது. பைத்தியக்காரத்தனமாகத் தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் பின்னர் உண்மை புலப்படும்.
அவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்து பக்தர்களின் கர்ம வினையைத் தாம் ஏற்று, அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த மகான்களுள் மிக முக்கியமானவர் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். ‘தங்கக்கைச் சாமி’ என்றும் ‘கிறுக்குச் சாமி’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டவர். பலரது வாழ்க்கை உயர்விற்குக் காரணமாக அமைந்தவர். ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையையைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.
ஒருமுறை, தெருவில் சவ ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதனைப் பின் தொடர்ந்து சேஷாத்ரி சுவாமிகள் சென்று கொண்டிருந்தார். அருகே ஓர் மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு வீட்டில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபமுற்றனர். சிலர் திட்டினர். சிலரோ, சுவாமிகள் வந்தது நிச்சயம் நல்லதற்குத் தான் என நினைத்தவாறு அமைதியாக இருந்தனர்.
மகான் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. நேரே சமையல் அறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய அண்டாவில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. வேகமாகச் சென்றவர் அப்படியே அதைச் சாய்த்துக் கீழே கொட்டிவிட்டு, வேகமாக வெளியே ஓடிச் சென்று விட்டார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி, ஆத்திரம். சிலர் திட்டிக் கொண்டே மகானைப் பிடிக்கப் பின்னால் வேகமாக ஓடினர். பயனில்லை. மகான் எங்கேயோ போய் விட்டிருந்தார்.
மகானின் இந்தச் செய்கைக்குக் காரணம் புரியாமல், கீழே கொட்டிக் கிடந்த சாம்பாரைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி போய் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மகானை இரு கை கூப்பி வணங்கினர்.
காரணம், சாம்பாரில் ஒரு பெரிய நல்ல பாம்பு செத்துக் கிடந்தது. இதனை மகான் முன்கூட்டியே உணர்ந்து, சாம்பாரை யாரும் உண்டுவிடக் கூடாது, அதனால் ஆபத்தோ, உயிரிழப்போ நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அண்டாவைக் கவிழ்த்தார் என்பதறிந்து அவரைத் தொழுதனர்.
மகான்களின் பெருமை சொல்லவும் அரிதே!
-Partha.

3/26/2012

ஜென் கதைகள்

                                                        


ஜென் கதைகளில் கூரப்படும் ஒவ்வரு கருத்துகளும் மிக ஆழமாக உணரக்கூடிய கருத்துகள் ஆகும். வாழ்கையில் எந்த ஒருகட்டதிலும் அவைகள் நமக்கு ஒரு தீர்வை தரக்குடியவையாகும். ஜென் துறவிகளின் கதைகளில் நகைச்சுவைக்கும் ஒரு தனி இடமுண்டு


  • ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார் அவர் எப்போதும் சிரித்துகொண்டே இருபதோடு மற்றவர்களையும் சிரிக்கவைதுக்கொண்டிறுப்பார். மக்களும் அவர் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள். ஒரு நாள் அவர் மரணப்படுக்கையில் இருந்தார் மக்கள் அவரை சுற்றி நின்று அழுதவண்ணம் இருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு சீடனை அழைத்து. தன் சிதைக்கு தீ மூட்டும்முன் தன்னுடைய உடம்பை நீரில் நனைத்து விட வேண்டாம் என்று கூரிவிட்டு இறந்துவிட்டார் மக்களும் சீடர்களும் அழுதபடியே அவரது சிதைக்கு நெருப்பு மூட்டினர் அப்போது அவரது உடம்பிலிருந்து மறைத்து வைக்கபட்டிருந்த பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் வெடித்தது சோகமாய் இருந்த மக்கள் சிரித்து விட்டார்கள். இறந்த பின்னும் மக்களை சிரிக்க வைத்ததால் அவருக்கு சிரிப்பு புத்தர் என்றே அழைக்க ஆறாம்பிதுவிட்டார்கள்.
*********************************************************************************
 
ஒரு முறை ஒரு புத்த துறவி கடற்கரையில் அமர்ந்து கண் மூடி மந்திரம் சொல்லிகொண்டிருந்தார்.அப்போது அவர் மீது பல பறவைகள் வந்து அமர்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தது. அதை பார்த்த சிறுவன் அந்த துறவியிடம் எப்படி பறவைகள் உங்கள் மீது வந்து பயமில்லாமல் அமர்கின்றன என்று கேட்டான் அதற்கு அந்த துறவி நான் அந்த பறவைகளை துன்புறுத்தவில்லை அதனால் அவைகள் என்மீது அமர்கின்றன என்றார். அப்போது அந்த சிறுவன் எனக்கு ஒரு பறவையை நாளை பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அதற்கு அந்த துறவி சரி என்று ஒப்புக்கொண்டார். அடுத்தநாள் அந்த துறவி மனதில் நிம்மதியற்றுபோய் அந்த பறவையை சிறைபிடிக்க நினைத்தார் எப்போதும் அவர்மீது வந்து அமரும் பறவைகள் ஒன்று கூட அவர் பக்கத்தில் அமரவில்லை. அந்த துறவி அந்த பறவைகளை சிறைபிடிக்கும் நினைப்பு அந்த பறவைகளுக்குள் எழுந்து எந்த பறவையும் வந்து அமரவில்லை. பிறகு தான் செய்த,செய்ய நினைத்த தவறை நினைது வருந்தினார் அந்த துறவி.
 
-Partha.

3/15/2012

ஜென்

                                                                 Meditation : Flower Emblem with Pedals on Gold
ஜென் தத்துவங்கள். . .
காலம்
யாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும், காலம் நின்று விடுவதில்லை.

மதம்
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மை மறந்த மதம் வெறும் யானையின் மதமே.

இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு. தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.

தேடுதல்
கண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

தன்னைப் போல் பிறரையும் நேசி.

எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் போடாதே.

சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல். சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

அறியாமைஅறியாமை அன்பு செலுத்தும். அறிவு ஆதிக்கம் செலுத்தும் .
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.
நான்'இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது அங்கே 'நான்' என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது.
மௌனம்மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.
காலம்காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டமே.
-Partha.

சென் கதைகள்

                                                                        Meditation : Beautiful Buddha image in Thailand, a white background

ஒரு ஊரில் இரு சென் வழிபாட்டிடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. அதில் நந்தவனம் ஒன்றும் இருந்தது. அவ்விரு வழிபாட்டிடங்களின் நடுவே சிறிய சுவர் மட்டுமே இருந்தது.
நந்தவனத்தை ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு பெரிய துறவி வருகின்றார் என்பதால் நந்தவனம் முழுமையும் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்தார். செடிகளை வெட்டி அழகு படுத்தினார். காய்ந்த மற்றும் பழுத்த இலைகளையெல்லாம் அங்கிருந்து அப்புறப் படுத்தினார். நந்தவனம் பிரகாசமாய் இருந்தது.
இவர் செய்யும் பணிகள் அத்தனையையும் சுவருக்கு அப்பால் இருந்து அந்த ஆலயத்தில் இருந்த ஒரு வயது முதிர்ந்த சென் துறவி பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவரைக் கவனித்த நந்தவன தோட்டக்காரர், ‘ஐயா, இப்போது நந்தவனம் எத்தனை அழகாக இருக்கின்றது பார்த்தீர்களா?’ என்றார்.
துறவியோ, ‘ம்ம். . . ஒன்றே ஒன்று மட்டும் குறைபாடாக இருக்கின்றது. என்னை இந்தச் சுவரைத் தாண்டி வருவதற்குக் கை கொடுத்தால் அதைச் சரி செய்து விடுவேன். அப்புறம் மிக அருமையாக இருக்கும்.’ என்றார்.
வயது முதிர்ந்த ஜென் துறவியை சுவரேற்றிக் கீழே இறங்க உதவி செய்தார் தோட்டக்காரர்.
உள்ளே நுழைந்த துறவி ஒரு மரத்தின் அருகில் சென்று அதைப் பலம் கொண்ட மட்டும் பிடித்து ஆட்டினார். அப்போது சில இலைகள் இயற்கையாய்க் கீழே விழுந்தன.
‘அவ்வளவு தான்! இப்போது தான் அருமையாக இருக்கின்றது’ என்றார் துறவி.
-Partha.

ஜென் கதை

                                                                Meditation : meditation at sunset illustration


ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்.. " அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்.. " இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், " நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.. "போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...

மல்ல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்... டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

*******************************************************************************

ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற வேண்டி ஒருவன் வந்தான்.
'ஐயா! நான் ஞானோதயம் பெற விரும்புகிறேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?"
"எப்படியும் பத்து வருடங்கள் ஆகும்" என்றார் குரு. 'என்ன பத்து ஆண்டுகளா?' அதிர்ச்சியில் கேட்டான் அவன்.
'தோராயமாகச் சொன்னேன். சரியாகச் சொன்னால் இருபது வருடங்கள் ஆகும்'
'என்ன? இரட்டிப்பாகச் சொல்கிaர்களே' கோபப்பட்டான் அவன்.
'இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டால் முப்பது வருடங்கள் ஆகும்' என்றார் குரு.
'ஞானம் என்பது சென்றடையும் ஓர் இடமோ, முயன்று கைப்பற்றும் ஓர் இலக்கோ அல்ல. அது பயணம். வெறும் பயணம்தான். வேகமான பயணம். வழியிலுள்ள காட்சிகள் எதையும் காணவிடாது. வெகுசீக்கிரம் எதையும் கற்க வேண்டும் என்று எண்ணும் போது எதையுமே சரிவர அறிய முடியாது போகும். சிறியதிலி ருந்துதான் பெரியது உண்டாகும் மெளனத்திலிருந்துதான் ஓசை உண்டா கும். இதை உணர்வதுதான் ஞானம்' என்கிறது இந்த ஜென் கதை.

-Partha.

2/13/2012

ஆன்மாவை பிரகாசப்படுத்து - ஜென்

சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அருகே சில இளைஞர்கள் ஆற்று நீரில் மிதந்து சென்ற முட்டை ஒடுகளை சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களில் ஒருவராலும் முட்டை ஓடுகளை குறிபார்த்து சுட முடியவில்லை.
அவர்களை புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் விவேகானந்தர். அவரின் சிரிப்பை கண்ட இளைஞர்கள் அவரிடம், கேலியாக பார்க்கிறீர்களே உங்களால் சுட முடியுமா? என்று சவால்விட்டனர்.
முயற்சி செய்கிறேன் என்றார் விவேகானந்தர் அடக்கமாக.. நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமான காரியல் இல்லை என்றனர் இளைஞர்கள்.
விவேகானந்தர் அவர்களிடமிருந்து துப்பாக்கியை வாங்கினார். ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு ஒவ்வொன்றாக 12 முட்டை ஓடுகளை சுட்டார். ஒரு முறை கூட அவரது குறி தவறவில்லை. இளைஞர்களுக்கு ஒரே வியப்பு. உங்களால் இது எப்படி முடிந்தது என்று கேட்டனர்.
விவேகானந்தர் பதிலளித்தார், நான் இப்போதுதான் முதல் தடவையாக துப்பாக்கியை கையில் எடுத்துள்ளேன். எதைச் செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும். அப்படி செய்தால் எதையும் சாதிக்கலாம். ஒன்றை செய்யும்போது இன்னொன்றை நினைக்கக் கூடாது என்றார்.
நாமும் வெற்றி பெற மனதை ஒருமுகப்படுத்துவோம்.

*******************************************************************************
ஒரு குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்
‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’
‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’
‘இது ஏன்’ என்று குரு வினவினார்
சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாக கூறினர்
‘ ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்’
‘ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக் உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்’
பலவாறு விடைகள் வந்தன
எதுவும் குருவை திருப்திப்படுத்தவில்லை
‘நீங்கள் அனைவரும் வெறும் வார்த்தைகளைக் கேட்டு விடை மொழிகிறீர்கள்’
‘ஒருவரும் சரியான விடை கூறபோவதில்லை’ என்றார்.
சீடர்கள் யாரும் சரியான பதில் கூறவில்லை.
குரு சொன்ன பதில் :
ஒருவர் மட்டும் நனையவில்லை, இருவருமே நனைந்தனர் என்பது தான் விடை.
வெறும் வார்த்தையை மட்டும் வைத்துப் பார்த்தால் ஒருவர் நனையவில்லை மற்றவர் நனைந்தார் என்று பொருள் கொள்வோம். அதன் உட்பொருள் அறிந்தால் விடை விளங்கும்.
**********************************************************************************************
ஒரு 200 பேர் இருக்கற ரூம்ல ஒருத்தர் (அவங்களுக்கு செமினார் எடுக்க வந்தவர்) பேச ஆரம்பிச்சார். ஒரு புது ருபாய் தாளை எடுத்து அவரது கையில் உயர்த்தி பிடித்தவாறு இது யாருக்கு வேணும்னு கேட்டார். அனைவரும் அவர்களது கைகளை உயர்த்தினர்.

பின்பு அவர் அந்த தாளை கசக்கி சுருட்டி பின்பு மீண்டும் அதையே கேட்டார். ஒரு கை குட கீழே போகவில்லை.

பின்பும் அவர் அந்த தாளை கசக்கி கீழே போட்டு செருப்பால் மெத்து நசுக்கி கிட்ட தட்ட ஒட்டு போட்ட ருபாய் தாள் போல் மாற்றி விட்டு பின்பு மீண்டும் அதையே கேட்டார். ஒரு கை குட கீழே போகவில்லை.

அப்போது அவர்

நண்பர்களே இந்த நிமிடம் நீங்கள் ஒரு அற்புதமான பாடத்தை கற்று கொண்டு இருப்பிர்கள். நான் இந்த ருபாய் தாளை என்ன செய்தலும் சரி உங்களில் ஒருவரது கை குட கீழே இறங்கப்போவதில்லை, காரணம் அந்த ரூபாயின் மதிப்பு குறைவதில்லை இல்லை. அது அழுக்கனாலும் அதன் மதிப்பு குறையாது.

வாழ்க்கையில் பல முறை நாம் கீழே விழுவோம், மனதால் ஒடிந்து நோருங்குவோம், நாம் எடுக்கும் முடிவுகளால் சாக்கடையில் தள்ள படுவோம். நாமே நம்மை எதற்கும் ப்ர்யோஜனமட்ட்றவர் என எண்ணுவோம்.

ஆனால் நண்பா, எத்து நடந்தாலும் நாம் நம் மதிப்பை இழக்க போவதே இல்லை, நீ ஒடிந்து நொறுங்கி குப்பையில் எரியாப்பட்டலும் உன்னை உண்மையாய் நேசிப்பவர்களுக்கு நீ என்றுமே விலைமதிப்பில்லா மாணிக்கம் தான். நம் வாழ்வின் மதிப்பு நாம் என்ன செய்கிறோம் என்பதால் வருவதல்ல, நாம் யார் என்பதால் மட்டுமே. நீ தனித்தன்மை வாய்ந்தவன் என்பதை என்றும் மறவாதே.
-Partha.
.