ஒரு ஊரில் இரு சென் வழிபாட்டிடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. அதில் நந்தவனம் ஒன்றும் இருந்தது. அவ்விரு வழிபாட்டிடங்களின் நடுவே சிறிய சுவர் மட்டுமே இருந்தது.
நந்தவனத்தை ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு பெரிய துறவி வருகின்றார் என்பதால் நந்தவனம் முழுமையும் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்தார். செடிகளை வெட்டி அழகு படுத்தினார். காய்ந்த மற்றும் பழுத்த இலைகளையெல்லாம் அங்கிருந்து அப்புறப் படுத்தினார். நந்தவனம் பிரகாசமாய் இருந்தது.
இவர் செய்யும் பணிகள் அத்தனையையும் சுவருக்கு அப்பால் இருந்து அந்த ஆலயத்தில் இருந்த ஒரு வயது முதிர்ந்த சென் துறவி பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவரைக் கவனித்த நந்தவன தோட்டக்காரர், ‘ஐயா, இப்போது நந்தவனம் எத்தனை அழகாக இருக்கின்றது பார்த்தீர்களா?’ என்றார்.
துறவியோ, ‘ம்ம். . . ஒன்றே ஒன்று மட்டும் குறைபாடாக இருக்கின்றது. என்னை இந்தச் சுவரைத் தாண்டி வருவதற்குக் கை கொடுத்தால் அதைச் சரி செய்து விடுவேன். அப்புறம் மிக அருமையாக இருக்கும்.’ என்றார்.
வயது முதிர்ந்த ஜென் துறவியை சுவரேற்றிக் கீழே இறங்க உதவி செய்தார் தோட்டக்காரர்.
உள்ளே நுழைந்த துறவி ஒரு மரத்தின் அருகில் சென்று அதைப் பலம் கொண்ட மட்டும் பிடித்து ஆட்டினார். அப்போது சில இலைகள் இயற்கையாய்க் கீழே விழுந்தன.
‘அவ்வளவு தான்! இப்போது தான் அருமையாக இருக்கின்றது’ என்றார் துறவி.
-Partha.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக