5/31/2011

ரமண மகரிஷி

பால் ப்ரண்டன் சந்தித்த இன்னொரு சித்தர் விசுத்தானந்தர். அவரது சக்திகள் வித்தியாசமானவை. அவர் எந்த ஒரு பூவின் நறுமணத்தையும் தானிருந்த இடத்தில் ஏற்படுத்த முடிந்தவராக இருந்தார். ஒரு பூதக் கண்ணாடியின் மூலம் ஒரு கைக்குட்டையில் சூரிய ஒளியைக் குவித்து மற்றவர்கள் நினைத்த எந்த நறுமணத்தையும் ஏற்படுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் திபெத்தில் மட்டுமே மலரக் கூடிய ஒரு மலரை எண்ண, அவர் அந்த மலரின் நறுமணத்தையும் வரவழைத்துக் காட்டி பால் ப்ரண்டனை ஆச்சரியப்படுத்தினார்.

வேறெதாவது சக்திகள் அவரிடம் உள்ளதா என்று பால் ப்ரண்டன் கேட்க விசுத்தானந்தர் ஒரு சிட்டுக் குருவியை அவர் முன்னாலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுறது இறந்து விட்டது என்பதை பால் ப்ரண்டனை உறுதிபடுத்திக் கொள்ளச் சொன்னார். பின் தன் கையிலிருந்த பூதக் கண்ணாடி மூலம் சூரிய ஒளிக்கதிர்களை ஒன்றாகக் குவித்து இறந்த சிட்டுக் குருவியின் ஒரு கண்ணில் குவித்து மறுபடியும் உயிர்ப்பித்துக் காட்டினார். சிட்டுக் குருவி மறுபடி உயிர்பெற்று அசைந்து நடந்து சிறிது தூரம் பறந்து சென்றதைக் கண்ணால் பார்த்த பால் ப்ரண்டன் பிரமித்துப் போனார். அந்த உயிர் பெற்ற பறவை அரை மணி நேரம் வாழ்ந்து பின் இறந்து போனது.

மரணத்தையும் வெல்ல முடிந்த சக்தி படைத்த விசுத்தானந்தர் பால் ப்ரண்டன் இந்தியா வந்த காரணத்தை அறிந்து சொன்னார். "தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை..."

அதே செய்தியைத் தான் பால் ப்ரண்டன் சந்தித்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களும் சொன்னார். பால் ப்ரண்டனைப் பல இடங்களில் தொடர்ந்த ஒரு மனிதர் "நீங்கள் தேடும் யோகியை நான் காட்டுகிறேன். அவரை எனக்குத் தெரியும்" என்று அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் அவர் வார்த்தையில் பால் ப்ரண்டனுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த மனிதர் தொடர்வதை நிறுத்தவில்லை. கடைசியில் பால் ப்ரண்டன் அவர் சொன்ன நபரையும் சந்திப்பதில் தனக்கு நஷ்டமேதும் இல்லை என்று நினைத்து "நீங்கள் சொல்லும் யோகி எங்கிருக்கிறார்?" என்று கேட்க அவர் திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியைப் பற்றி சொன்னார்.

பால் ப்ரண்டன் ரமண மகரிஷியை சந்திக்கச் சென்றார்.

ரமணாசிரமத்தின் ஒரு சிறிய ஹாலில் ரமண மகரிஷி அமர்ந்திருக்க அவர் முன் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ரமண மகரிஷி பால் ப்ரண்டனைப் பார்த்தார். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்ட ரமண மகரிஷியின் பார்வை சாதாரணமானதாக இருக்கவில்லை. அவர் பார்வை காந்தத் தன்மை கொண்டதாக இருந்தது. பால் ப்ரண்டன் தன் பார்வையை மகரிஷியிடமிருந்து விலக்க முடியாதவராக இருந்தார். திடீரென்று தன் பார்வை பால் ப்ரண்டனிடமிருந்து விலக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் பால் ப்ரண்டன் தான் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்ந்தார். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களுடன் தானும் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் ஒருவித அசாதாரண சக்தியலை அவரை ஆட்கொண்டது. தன்னை மகரிஷி புறக்கணித்ததாக எண்ணிய எண்ணம் மெள்ள விலகியது. ரமண மகரிஷி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருடைய ஞான சக்தி அந்த இடமெல்லாம் வியாபித்திருந்ததாக பால் ப்ரண்டன். அவர் மனதில் ரமண மகரிஷியிடம் கேட்க எண்ணியிருந்த கேள்விகள் கூட அவர் மனதில் இருந்து தானாக உதிர்ந்தன. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரமைதியை பால் ப்ரண்டன் அந்த இடத்தில் உணர்ந்தார். கேள்விகள் இல்லாத பதில் தேவைப்படாத எதனாலும் பாதிக்கப்படாத ஒரு ஆனந்த நிலையை பால் ப்ரண்டன் அனுபவித்தார்.

மற்றவர்கள் காட்டிய அபார சக்திகள் எல்லாம் இந்த அமைதியின் முன் ஒரு பொருட்டாகவே பால் ப்ரண்டனுக்குத் தோன்றவில்லை. தான் தேடி வந்த யோகியை அந்தக் கணமே பால் ப்ரண்டன் அடையாளம் கண்டார். அவருடைய தேடல் முடிவுக்கு வந்ததாக அவர் உணர்ந்தார். அங்கேயே சில காலம் தங்க பால் ப்ரண்டன் தீர்மானித்தார்.

முதல் முதலில் ரமண மகரிஷியிடம் பேச வாய்ப்பு கிடைத்த போது பால் ப்ரண்டன் சொன்னார். "ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் நகர சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

மகரிஷி புரிகிறது என்பது போல் தலையசைத்தார்.

பால் ப்ரண்டன் தயக்கமில்லாமல் தனக்கு மனதில் பட்டதை அப்படியே சொன்னார். "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

அருகிலிருந்த சிலர் பால் ப்ரண்டனுடைய வெளிப்படையான கேள்வியைக் கேட்டு திகைத்தனர். மகரிஷி அவரையே பார்த்தாரே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை. பால் ப்ரண்டன் தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?"

"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"

பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.

"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"

ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."

அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.

ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"

"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."

"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள். ரமண மகரிஷி அவர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?

ரமணாஸ்ரமத்தில் இருக்கும் போது பால் ப்ரண்டனுக்கு யோகி ராமையா என்னும் ஆந்திர சித்தரின் அறிமுகம் கிடைத்தது. வருடத்தில் ஒரு முறை வந்து சுமார் ஒரு மாதம் அங்கு இருந்து விட்டுப் போவார் அந்த சித்தர். ஒரு முறை பால் ப்ரண்டன் இருந்த அறையில் ஒரு கொடிய விஷமுள்ள நாகம் வந்து விட பலரும் ஓடி வந்து அதைக் கொல்ல கம்புகளை எடுக்க யோகி ராமையா அங்கு வந்து அவர்களைத் தடுத்து தன் இரு கைகளாலும் அந்த நாகத்தை எடுத்து அதை அன்புடன் பார்க்க, தன் விஷ நாக்குகளை வெளியே நீட்டினாலும் அவரை தீண்டாமல் அந்த நாகம் சீற்றம் தணிந்து அவருக்கு தலை வணங்கியது. ராமையா அதை கீழே விட யாரையும் உபத்திரவிக்காமல் அந்த நாகம் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டது. ஆச்சரியத்துடன் "உங்களுக்குப் பயமாக இருக்கவில்லையா?" என்று பால் ப்ரண்டன் கேட்டதற்கு ராமையா சொன்னாராம். "நான் மனதில் வெறுப்பு சிறிதும் இன்றி முழு அன்புடன் அதை அணுகியிருக்கும் போது பயப்பட என்ன இருக்கிறது?". மனித எண்ணங்களை உணரும் சக்தி விலங்குகளுக்கும் உண்டு என்பதையும் அவை அதன்படியே நடந்து கொள்கின்றன என்பதையும் அந்த நிகழ்ச்சி தெரிவிக்கிறதல்லவா?

ரமண மகரிஷி பெரும்பாலும் மௌன நிலையிலேயே இருப்பார். அவர் முன் வந்தமர்ந்து செல்லும் பல மனிதர்களுக்கு அந்த வார்த்தைகளற்ற சூழ்நிலையிலும் தேடி வந்ததற்கு ஒரு பதில் அல்லது கிடைத்தது. சில சமயங்களில் மட்டுமே அவர் பேச இசைந்தார். பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."


ரமண மகரிஷியைக் கண்டு அவர் காலடியில் சில காலம் தங்கி ஆன்மீக அனுபவத்தை ஆழமாக உணர்ந்த பால் ப்ரண்டன் இந்த தேசத்தில் வந்து தேடியதைக் கண்ட திருப்தியில் தன் நாடு திரும்பினார்.
Thanks:- என்.கணேசன்
Partha Blog

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக