'எங்கே நிம்மதி' என்று புலம்பித்திரியும் இளைஞர்களைப் பார்க்கும் போது 'புதிய பறவை' திரைப்படத்தில் வரும் பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது. எந்திர வாழ்க்கையாக மாறிப்போனதால் மனிதன் நிம்மதியைத் தொலைத்துவிட்டான். மன அழுத்தத்துக்கு ஆளாகி இளைஞர்களும், இளம்பெண்களும் தாம்பத்திய வாழ்வில் தோல்வியைத் தழுவுவதும் எதார்த்தமாகிப்போனது.
இப்படி மனித சமுதாயத்தையே ஆட்டுவிக்கும் மன அழுத்தம் என்றால் என்ன, அது எப்படி ஏற்படுகிறது, மன அழுத்தத்துக்கு ஆட்பட்டுவிட்டால் அதில் இருந்து எப்படி எளிதில் மீளுவது போன்றவை குறித்து கரூரைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவரும், உளவியல் நிபுணருமான செந்தில்வேலன் இதோ நம்மிடம் பகிர்ந்து கொண்டது:
மன அழுத்தம் என்றால் என்ன?
ஏதாவது ஒரு விஷயம் மனிதர்களின் தினசரி வாழ்வில் ஒரு மாற்றத்தையோ அல்லது மனிதர்கள் சமாளிக்கும் திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும் போது உணரப்படும் விரும்பத்தகாத உணர்வையே மன அழுத்தம் என்கிறோம்.
பொதுவாக மன அழுத்தம் எப்படி வெளிப்படும்?
மன அழுத்தம் கோபமாக, பயமாக, இயலாமையாக, கவலையாக, வெறுப்பாக, அமைதியின்மையாக, கவனமின்மையாக-எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
மன அழுத்தம் யாருக்கு ஏற்படுகிறது?
மன அழுத்தம் சிறியவர், பெரியவர் என்று வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இன்றைய காலக் கல்விச் சுமையால் குழந்தைகளுக்குகூட மன அழுத்தம் ஏற்படலாம். ஏழை-பணக்காரர், ஆண்-பெண், படித்தவர்-படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி யாருக்கும் மன அழுத்தம் ஏற்படும்.
மன அழுத்தம் ஏற்படக் காரணம் என்ன?
மன அழுத்தம் பெரும்பாலும் குடும்ப உறவுகளில் ஏற்படும் கசப்புகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றாலும் சமுதாய சூழ்நிலைகளாலும் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் பிரச்னைகளாலும் ஏற்படும்.
நீங்கள் ஒரு உளவியல் நிபுணர். ஆக உளவியல் ரீதியாக மன அழுத்தத்துக்கு எவை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன?
உளவியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் மன விரக்தி, வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றம், முரண்பாடுகள், நிர்பந்தம் ஆகியவையே மன அழுத்தத்துக்கு காரணம்.
அதாவது ஒரு இலக்கை அடைய பலமுறை முயன்றும் தோல்வி ஏற்பட்டால் மன விரக்தி ஏற்படுகிறது. பெரும்பாலான தருணங்களில் நாம் எதார்த்தம் இல்லாத இலக்குகள், எதிர்பார்ப்புகள், ஒப்பீடுகளை மனதில் வைத்து விரக்தி அடைகிறோம்.
அமைதியான நதியில் சீரான வேகத்தில் நிதானமாகச் சென்று கொண்டிருக்கும் படகைப் போன்ற நம் வாழ்வில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மை புரட்டிப் போடுகின்றன. நம்முடைய பொறுமைக்கும், சிக்கலை சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக உள்ளன.
அதேபோல அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும், அனுபவிக்கும் முரண்பாடுகள் கணக்கிலடங்கா. விழித்தெழுவதில் இருந்து உறங்கும்வரை முரண்பாடுகளோடு போராட வேண்டியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ஆசைகள், விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்பட போட்டியிடும்போது முரண்பாடு ஏற்படுகிறது.
அதேபோல உலகில் எல்லோரும் ஏதாவது நிர்பந்தத்துக்கு ஆளாகி நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். சமூக அந்தஸ்துக்காக தகுதிக்கு மீறி கடனை வாங்கி ஆடம்பர வீடு கட்டுகிறோம். கார் வைத்துக் கொள்கிறோம், கடனை வாங்கியாவது லட்சத்தைப் பறிக்கும் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதை கெüரவமாக நினைக்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதார சுமைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
மன அழுத்தத்தை நம் அருகிலேயே வராமல் துரத்தி அடிக்க முடியுமா?
இன்றையச் சூழலில் மன அழுத்தத்தை யாராலும் தவிர்க்க முடியாது. ஆனால் குறைக்கலாம், சமாளிக்கலாம், தாங்கிக் கொள்ளலாம். அப்படி ஒருவர் தனக்கு மன அழுத்தமே வருவதில்லை என்று கூறினால் அவர் சமூக ஒட்டுதலில் இல்லை எனக் கூறலாம்.
அப்படியென்றால் மன அழுத்தத்தை எப்படி குறைப்பது?
ஆழ்மனதில் உள்ள தவறான கருத்துக்களையும் அவற்றால் நாம் உலகைப் பார்க்கும் கோணத்தில் ஏற்படும் விகாரங்களையும் அறிந்து கொண்டால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
நகைச் சுவை மன உளைச்சலைப் போக்கும் அரு மருந்து. அதனால்தான் வள்ளுவரே இடுக்கண் வருங்கால் நகுக என்றார். கடினமான சூழ்நிலையை நகைச்சுவை தலைகீழாக மாற்றிவிடும். இதனால்தான் இன்று பல நகரங்களில் நகைச்சுவை மன்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
நமக்கு நெருக்கமானவர்களிடம், நம்மை புரிந்து கொள்பவர்களிடம் மனம் விட்டுப் பேசி நமது மனப்பாரத்தை இறக்கிவைக்கலாம். பல நேரங்களில் வெடித்து வரும் அழுகை மனப் பாரத்தை கழுவி விடுகிறது. ஆழ்ந்த ஓர் அழுகைக்குப்பின் மனம் மழை பெய்த வானம் போல தெளிவாகவும், லேசாகவும் மாறிவிடுகிறது.
யோகா உடற்பயிற்சி, ஆழ்மன தியானம், உடல் தளர்வுப் பயிற்சிகள், சாதாரண உடற்பயிற்சி ஆகியவற்றை தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கும் போதும் நம் மன உளைச்சல் குறைகிறது.
சுருங்கச் சொல்வதானால் நேர்மையாக, அடுத்தவரின் உணர்வுகளை மதிப்பவராக, நல்ல பழக்க வழக்கங்கள் உடையவராக, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவராக, தமது எல்லைகளை அறிந்தவராக, நிதானமானவராக, உணர்ச்சிவசப்படாதவராக இருக்கும்பட்சத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சலை எளிதில் சமாளித்து இனிதான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.
Thanks :- கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக