1/29/2011

இனிய வாழ்க்கை

ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார். “குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”

ஜென் குருக்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதோ, மணிக்கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார். “உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல முடியும்”

சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது”

பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”

சீடருக்கு ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்? திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா? அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம் வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்”

பான்காய் சொன்னார். “அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”

பான்காய் மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என் கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன் இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.

பான்காய் சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை. நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால் அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை. ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

இது கோபத்திற்கு மட்டுமல்ல நம்மை அலைக்கழிக்கும் வெறுப்பு, பொறாமை, வருத்தம் போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். இது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் துன்பத்தைப் பெருக்குபவை. அவற்றை நம்முடையதாக பாவிக்கும் போது, அவற்றை நம்மை அறியாமல் வளர்த்து வலுவாக்குகிறோம். அவை வலிமையாகும் போது அதன் விளைவுகளும் வலிமையாக நம்மைத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதலால் பாதிக்கப்படும் போது நாம் மூன்று உண்மைகளை நினைவில் வைத்தால் அவற்றின் பிடியில் இருந்து விலகி விடுதலையாகலாம்.

1. இந்த உணர்ச்சிகள் என்றுமே என்னுடைய மன அமைதிக்கோ, மகிழ்ச்சிக்கோ வழி வகுப்பதில்லை. மாறாக இவை கவலைக்கும், துக்கத்திற்குமே வழி வகுக்கக் கூடியவை.

2. இந்த உணர்ச்சிகள் தவறான அபிப்பிராயங்களாலும், கணிப்புகளாலும் ஏற்படுபவை. இவை என்னிடம் வர முயற்சிக்கும் உணர்ச்சிகள். ஆனால் இவை என்னுடையவை அல்ல.

3. இவற்றை என்னுடையவை என்று நான் அங்கீகரித்தால் ஒழிய, அப்படி நினைத்து பற்றிக் கொண்டிருந்தால் ஒழிய இவை என்னைப் பாதிக்க முடியாது.

இந்த உணர்ச்சிகளை பான்காய் கூறுவது போல புறத்தில் இருந்து வருபவை என்று உணருங்கள். இதற்கெல்லாம் கோபப்பட வேண்டும், இதையெல்லாம் வெறுக்க வேண்டும், இதற்கெல்லாம் பொறாமைப் பட வேண்டும் என்று நாம் யாரோ போட்ட பாதையில் போக வேண்டியதில்லை. அதை நம் பாதையாக முட்டாள்தனமாய் ஆக்கிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் அப்படி போய் அவதிப்பட வேண்டியதில்லை.

இது போன்ற உணர்ச்சிகள் வரும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். அவை வரும் போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களுக்குள்ளே விடாதீர்கள். “எனக்கு இயல்பானவன் போன்ற தோற்றத்தில் வந்தாலும் நீ அன்னியன். என்னுடையவன் அல்ல. எனவே போய் விடு” என்று அனுப்பி விடுங்கள்.

இந்த உணர்ச்சிகளை உங்களுடையது என்று நீங்களாகப் பற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படும். அவற்றை உங்களுடையது அல்ல என்று கை விட்டு விடுங்கள். உதறித் தள்ளி விடுங்கள். அவை உங்களை கஷ்டப்படுத்துவது தானாக முடிந்து விடும்.

-என்.கணேசன்

தொகுப்பு:- Partha

1/24/2011

நோய்த் தடுப்புக்கு சோயா!

நோய்த் தடுப்புக்கு சோயா!


வாழ்நாள் முழுவதும் சீரான ஆரோக்கிய வாழ்வுக்கு, நோய்த் தடுப்பு முறைகளே சிறந்த ஆதாரமாகும். இதில் பெரும் பங்கு வகிப்பது ஆரோக்கியமான உணவு முறைகள். நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை ஆராய்ந்த விஞ்ஞானிகளில் பலரின்  பார்வை சோயா புரோட்டீன் மீதே உள்ளது.
நிறைந்த ஊட்டச்சத்து: ஏனெனில் சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன.
  சோயா பால் தோற்றத்திலும் குணாதிசயத்திலும் பண்ணை பால் போலவே உள்ளது. பல்வேறு வயதில் உள்ளோருக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களைக் கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர உணவு சோயா மட்டுமே.
பால் பானங்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு மாற்று பானம் சோயா புரோட்டீன் பானம்தான்.
சோயா புரோட்டீன்களின் பயன்கள்: இதய நோய்களுக்குப் பெரும்பாலும் ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேருவதே காரணமாக உள்ளது. சோயா புரோட்டீனில் கொழுப்பு இல்லாததால் இந்த ஆபத்து பெருமளவு குறைக்கப்படுகிறது. சோயா புரோட்டீன் எலும்பு தேய்வதை தாமதப்படுத்துகிறது.
 சோயா புரோட்டீனைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் இறுதி மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்ப்பது போன்ற துன்பங்கள் குறையும்.
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்று நோய்களையும் தடுக்க முடியும்.
ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியின் நலனுக்கும் இது உகந்ததாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவசியமுள்ளோருக்கும், எடையில் கவனம் செலுத்த தேவையுள்ளோருக்கும் "சோய்விட்டா-டயபட்டிக்' சிறந்த ஒன்றாகும். இதில் சர்க்கரை, குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.
 
Thanks :- Dinamani

தினசரி வாழ்கை - ஞாநி களின் பாதை

சீன ஞானி கன்பூசியசிடம் ஒரு சீடர்,''ஆனந்தமாயிருக்க ஒரு வழி சொல்லுங்கள்,குருவே,''என்று கேட்டுக் கொண்டான்.அதற்கு  கன்பூசியஸ்   ''உன் கேள்வியே விநோதமாக இருக்கிறது.எந்த ரோஜாவும்,தான் ரோஜாவாக என்ன வழி என்று கேட்பதில்லை.''என்றார்.உங்களுக்குள் ஆனந்தம் எப்போதும் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் மனிதன் தன அறியாமையினால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு தடுக்காமலிருக்கக் கற்றுக் கொண்டால் ஆனந்தம் பொங்கிக்கொண்டே இருக்கும்.

*******************************************************************************
ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்டபோது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர்.ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.அவரை அனைவரும்பைத்தியம் என்று கேலி பேசினர்.அந்த ஞானி சொன்னார்,''எனக்குக் கடவுளிடம் எந்தவியாபாரமும் இல்லை.நம்மைக் காப்பாற்ற வேண்டுமா,மூழ்கடிக்க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று.அது என்னுடைய கவலை இல்லை.நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை.திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன்.ஆகவே,மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது.எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ,மரணத்தைப்பற்றி மட்டும் எப்படிஎன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்?

தொகுப்பு:-  Partha.

1/23/2011

சோயா உணவு

தற்சமயம் நம் உணவில் இடம் பிடித்துள்ள சோயா அதிகப் புரதச் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் கொண்டுள்ளது. இதன் மூலம், அதிக புரதத்தைக் குறைந்த செலவில் அடையலாம். சோயா பொருட் களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். மேலே குறிப்பிட்டுள்ள நோய்களைத் தவிர்த்து எழும்புகளை பலப்படுத்து வதுடன் பெண்கள் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது சோயா.

உண்மைகளும் நன்மைகளும் :

சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

சோயா உணவு கெட்ட கொலஸ்டிரால் என்னும் LDL (Low Density Lipo proteins) அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்டிரால் எனப்படும் HDL (High Density Lipoproteins) அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.

தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது.

சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங் களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.

இரும்புச்சத்தும், கால்ஷியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது.

சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ சத்து சருமத்தை மென்மையாக்குவதுடன், கண் சம்பந்தமான முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.

குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் இரத்த நிறமிகளின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கையும் உயரும்.

சோயா உணவு கால்ஷியம், மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக் களைக் கொண்டிருப்பதால், பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.

சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் (ஆர்த்ரைட்டிஸ்) குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது.

¼ கிலோ சோயா வடகத்திலுள்ள புரதம் 3-5 லிட்டர் பால் அல்லது 1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளின் புரதத்திற்கு சமமானது.

அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவு.
Thanks :-koothanallurmuslims.com
-Partha

ஜென் கதை

ஒரு மடாலயத்தில் துறவியும் அவரது சிஷ்யர்களும் மாலை நேரம் தியானம் செய்து கொண்டிருந்தனர். மடத்திலிருந்த ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்ததால், தியானத்தில் இருந்த ஒருமைப்பாட்டைக் கலைத்துக் கொண்டிருந்தது. அதனால் அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தனர். மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப் பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.
                                                     
                                                      ************************************
ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற வேண்டி ஒருவன் வந்தான்.
'ஐயா! நான் ஞானோதயம் பெற விரும்புகிறேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?"
"எப்படியும் பத்து வருடங்கள் ஆகும்" என்றார் குரு. 'என்ன பத்து ஆண்டுகளா?' அதிர்ச்சியில் கேட்டான் அவன்.
'தோராயமாகச் சொன்னேன். சரியாகச் சொன்னால் இருபது வருடங்கள் ஆகும்'
'என்ன? இரட்டிப்பாகச் சொல்கிaர்களே' கோபப்பட்டான் அவன்.
'இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டால் முப்பது வருடங்கள் ஆகும்' என்றார் குரு.
'ஞானம் என்பது சென்றடையும் ஓர் இடமோ, முயன்று கைப்பற்றும் ஓர் இலக்கோ அல்ல. அது பயணம். வெறும் பயணம்தான். வேகமான பயணம். வழியிலுள்ள காட்சிகள் எதையும் காணவிடாது. வெகுசீக்கிரம் எதையும் கற்க வேண்டும் என்று எண்ணும் போது எதையுமே சரிவர அறிய முடியாது போகும். சிறியதிலி ருந்துதான் பெரியது உண்டாகும் மெளனத்திலிருந்துதான் ஓசை உண்டா கும். இதை உணர்வதுதான் ஞானம்'

-Partha