12/15/2010

ஆண்டாள்

வேதங்களைத் தமக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி, சாஸ்திரங்கள் என்ற போர்வையில் தங்கள் போக்கில் பலர் போகத் தலைப்பட்டிருந்தனர். சாதாரண மனிதருக்கு தாழ்ச்சி உண்டாகியிருந்தது. இந்த நேரத்தில்தான் வேதமதத்துக்கு ஏற்றம் பிறக்க ஆழ்வார்கள் அவதரித்தார்கள். வேத அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தோருக்கும், வேதங்களைக் கற்க அனுமதிக்கப்படாத குலங்களில் பிறந்தோருக்கும், பெண்களுக்கும் எளியோருக்கும் வேத அர்த்தங்களை எளிமையாகப் புரிய வைக்க ஆழ்வார்களை இறைவனே தோன்றச் செய்தான் என்பர் பெரியோர். மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் வேத விளக்கங்களாக நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்ற இந்தப் பாசுரங்கள் வெளியிடப் பெற்றன.
ஆழ்வார்களின் பாசுரங்கள் வேதங்களை, உபநிஷதங்களை விளக்க வந்தவை என்பதைக் கண்டோம். அது எவ்வகையில் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது.
மஹாநாராயண உபநிஷத்தில் சொல்லப்படும் ஸ்லோகம் இது.
ததேவ அக்னிஸ் தத் வாயு: தத் ஸூர்யஸ்தது சந்த்ரமா: |
ததேவ சுக்ர மம்ருதம் தத்ப்ரஹ்ம ததாபஸ் ஸ ப்ரஜாபதி: || (1.2.2)
அதுவே அக்னி, அதுவே வாயு, அதுவே சூரியனும் சந்திரனும். அதுவே பிரகாசிக்கும் நட்சத்திரமும் அமிர்தமும். அது பிரம்மம், அது நீர், அதுவே ப்ரஜாபதி...
இப்படி உபநிஷத் சொல்லும் வாக்கியத்தை எல்லோரும் எளியவகையில் புரிந்துகொள்ளமுடியும் என்று சொல்வதற்கில்லை. எனவேதான் ஆழ்வார் எளிய தமிழில் இதே உபநிஷத் கருத்தை வெளிப்படுத்துகிறார் இப்படி... நாராயணனே எல்லாமும் என்பதை எடுத்துரைக்கும் அழகிய வெண்பா இது.

நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்

நீயே தவத் தேவ தேவனும் நீயே

எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து

இரு சுடரும் ஆய இவை

கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டில் - எழுதப்பட்டது இந்த வெண்பா.
ஆழ்வார் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தக் கடவுளைப் பார்த்து,
நீயே எல்லா உலகமும்!
பூவுலகில் நிலைத்திருப்பவை எல்லாம் உன் அருளே!
தேவர்களுக்கெல்லாம் தேவனும் நீயே!
நீ நெருப்பு,
மலையும் நீயே!
எட்டுத் திசைகளும் நீயே!
சூரிய சந்திரராய் ஒளிர்வதும் நீயே!
- என்றவாறு இந்தக் கருத்தை விவரித்துப் போகலாம். இப்படி நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் எல்லாமே வேதக் கருத்துகளை விளக்க வந்தவையே. அவ்வகையில் ஆழ்வார்கள் வேதம் தமிழ் செய்தவர்கள் என்று சொல்லத் தடையில்லையே!
ஆழ்வார்களின் திருநாமங்களையும் அவர்களின் அவதார தினங்களையும் வைணவ ஆசார்யரான சுவாமி மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்னமாலையில் அழகு வெண்பாவில் அமைத்துத் தந்திருக்கிறார்.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை

ஐயனருள்மாறன் சேரலர்கோன் - துய்யபட்ட

நாதன் அன்பர்தாள்தூளி நற்பாணன் நற்கலியன்

ஈதிவர் தோற்றத்தடைவா மிங்கு.

- என்ற உபதேசரத்னமாலை வெண்பா மூலம் ஆழ்வார்களின் வரிசையை நாம் அறிந்துகொள்ளலாம்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. நம்மாழ்வார்
6. குலசேகராழ்வார்
7. பெரியாழ்வார்
8. தொண்டரப்பொடியாழ்வார்
9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்
11. ஆண்டாள்
12. மதுரகவியாழ்வார்
என்று இந்த வெண்பாவின் மூலம் ஆழ்வார்களை வரிசைப்படுத்தலாம். ஆழ்வார்களின் கால நிலைப்படியும்  வரிசைப்படுத்தலாம்.

ஆழ்வார்கள் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது?

இந்தப் பன்னிரண்டு பேருக்கும் ஆழ்வார்கள் என்று ஏன் பெயர் ஏற்பட்டது என்றால், இவர்கள் பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தியைக் கொண்டிருந்தவர்கள் என்பதால்தான். இலக்கணப்படி இது வினையால் அணையும் பெயர். இறைவனிடத்தில் ஆழ்ந்த மனம் கொண்டிருந்த காரணத்தால் ஆழ்வார்கள் என்ற பெயர் ஏற்பட்டது. அவர்களுடைய மனம் எதிலெல்லாம் ஆழ்ந்திருந்தது...? ஆதிப்பரம்பொருளான பகவான் நாராயணனிடத்தில் ஆழ்ந்திருந்தது. அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்திலே, திவ்யமங்கள விக்ரஹ அழகிலே, அநந்த கல்யாண குணங்களிலே, திவ்ய அவதாரங்களிலே, அவன் எழுந்தருளியிருந்த திவ்ய தேசங்களெலேயெல்லாம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இந்த ஆழ்ந்த ஈடுபாட்டை ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள பிரபந்தப் பாசுரங்களில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஆழ்வார்களின் காலம்

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை இயற்றிய இந்த ஆழ்வார்கள் எல்லோரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். சங்க காலத்துக்குப் பிற்பட்டவர்கள்.
பூதத்தாழ்வார் பாடலில் மாமல்லை என்கிற துறைமுகத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. பல்லவ மன்னனான மகேந்திரனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் ஏற்பட்டது மாமல்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் குறித்துள்ளார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், முதலாழ்வார்கள் காலம் கடைச் சங்க காலமான 575--600 என்று கொள்கிறார்கள். முதலாழ்வார்களின் காலத்தைக் கொண்டு கணக்கிட்டால், கிட்டத்தட்ட ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் இவர்கள் என்று சொல்லலாம்.
ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி பல ஆராய்ச்சிகள் உள்ளன. டாக்டர் மு.ராகவையங்கார் எழுதிய ஆழ்வார்கள் கால நிலை என்ற நூல் பல தகவல்களைத் தருகிறது. ஓரளவு வரலாற்றுக் கால அளவோடு இயைந்து போவதால், இதை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அவருடைய கருத்துகள் அத்தனையுடனும் இயைந்து போக முடியாவிட்டாலும், அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முறை விஞ்ஞானபூர்வமானதாக பலரும் ஏற்கிறார்கள்.
அதேநேரம், வைணவ சம்பிரதாயப்படி ஒழுகும் நூல்களின் அடிப்படையில் பார்த்தால், ஆழ்வார்களின் காலம் பற்றிய கணக்கீடு, வரலாற்றுக் காலத்தோடு முரண்படுவதாகவே தோன்றும்.  வைணவ நூல்கள் அவ்வளவாகச் சரித்திர உண்மை பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதால், நாம் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கான ப்ரமாணமாக இவற்றை வைத்துக்கொள்ள இயலாவிட்டாலும், தத்துவத்துக்காகவும், பக்திக்காகவும் சம்பிரதாய நூல்களை ப்ரமாணமாக ஏற்கவேண்டும்.
இந்த அடிப்படையில், சுவாமி ராமானுஜர் காலத்தவரான கருடவாகன பண்டிதர் சமஸ்க்ருதத்தில் இயற்றிய திவ்ய சூரிசரிதத்திலும், மணிப்ரவாள நடையில் பின்பழகிய பெருமாள் ஜீயர் எழுதிய ஆறாயிரப்படி குருபரம்பரை நூலிலும், ஆழ்வார்கள் பிறந்த திருநட்சத்திரங்கள், அவர்களுடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை விவரித்துச் சொல்லப்பட்டுள்ளன.
ஆழ்வார்களையும் அவர்களுடைய சிறப்புகளையும் உபதேசரத்னமாலையில் அழகுறத் தெரிவிக்கும் மணவாளமாமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை உயர்வாக மதிக்கவேண்டுமேயல்லாது, தாழ்வாக நினைத்தல் தகாது என்கிறார்.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி - ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள்தாம் வாழி

செய்யமறை தன்னுடனே சேர்ந்து..

- என்று அவர்களுக்கான வாழ்த்துதலைச் சொல்கிறார். ஏழு உலகங்களும் உய்வடைவதற்காக அவர்கள் உரைத்த பிரபந்தங்கள் வாழவேண்டும்; வேதங்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.
மேலும்,

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்

அருளிச்செயலை அறிவாரார் - அருள்பெற்ற

நாதமுனி முதலான நம் தேசிகரையல்லால்

பேதை மனமே உண்டோ  பேசு.

ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும்

தாழ்வா நினைப்பவர்கள்தாம் நரகில் - வீழ்வார்கள்

என்றுநினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீயவர்பால்

சென்றணுகக் கூசித் திரி.

என்று, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை தாழ்வாக நினைத்தால், அவர்களுக்கு நரகமே கிட்டும் என்பதை அறிந்து, அவர்களோடு சேர்வதற்கு நீ மனதால் அஞ்ச வேண்டும் என்கின்ற அறிவுரையையும் தருகிறார் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.
மற்ற மத ஆசார்யர்களைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒரு சமயத்தைப் பிடித்துக்கொண்டு அந்தக் கருத்திலேயே உழன்று வருகின்ற அவர்களிடையே மத விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படாமல் கருத்துவேற்றுமை ஏற்பட்டதுண்டு. ஆதிசங்கரர், பாஸ்கரர், ராமானுஜர் காலத்தில் யாதாவப்ரகாசர் முதலியவர்களுக்கிடையில் கருத்தொற்றுமை நிலவியதில்லை. மாறுபட்ட விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் அவதரித்த ஆழ்வார்களுக்குள்ளே ஒரே கருத்து விளைந்திருந்தது. அவர்கள் நாராயண பரத்வத்தை ஒரே குரலில் உரக்கச் சொன்னார்கள். ஒருவர் கருத்தை அறிந்து காலத்தால் பிற்பட்ட மற்றவர் பின்பற்றினார் என்பது அல்ல இதன் பொருள். உண்மைத் தத்துவமான ஒரே கருத்தினையே அவர்கள் இறைவன் மூலமாக உணர்ந்து, வெவ்வேறு காலங்களில் வெளிப்படுதினார்கள் என்பதே நாம் அறிய வேண்டியது. இதனாலேயும் இவர்களுடைய பிரபந்தப் பாசுரங்களை ப்ரமாணமாகக் கொள்ளலாம் என்பது பெரியோர் கருத்து.
இன்றைக்கு பரிகாரத்தின் பெயரால் பல்வேறு பூஜை மந்திரங்களும் உலாவரக் காண்கிறோம். லாபம் கருதி மந்திரங்களைச் சொல்லி வருவதையும் பார்க்கிறோம். ஆனால் ஆழ்வார்கள், இதுபோன்ற லாபக் கணக்கும், பலன்களும் கருதி, பாடல்களைப் புனைய வேண்டுமே என்கின்ற நிர்பந்தத்தால் பாடவில்லை. இயற்கையாகவே, பக்திப் பெருக்கெடுத்து, பகவானின் ஸ்வரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து அன்பு மேலீட்டால் தாமாகவே வந்த சொற்கள்தான் ஆழ்வார்களுடையது.

வேதமே ப்ரமாணம்

பிணங்கும் சமயங்கள் பலவும் இருக்கையில் தத்வ நிர்ணயம் செய்யும்போது, ப்ரமாணம் கொண்டே நிச்சயிக்கவேண்டும். ப்ரமாணம் மூன்று வகைப்படும். ப்ரத்யக்ஷம் - அதாவது நேரிலேயே காண்பது ; அனுமானம் - ஒன்றின் உண்மைத் தன்மையால் மற்றொன்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது ; சாஸ்த்ரம் - அதாவது, அறிந்தவர்கள் கொண்ட சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்துகொள்வது...
இப்படி மூன்று ப்ராமணங்கள் இருந்தாலும், சாஸ்த்ரப் ப்ராமணம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பிரத்யக்ஷம் மற்றும் அனுமானங்களால் அறியமுடியாத புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை சாஸ்திரம் கொண்டே அறியவேண்டும். அந்த சாஸ்திரங்களில் தலையாயது வேதம்.
வேதங்களைத் தொகுத்த மகாமுனியான வேதவியாச முனிவர், கங்கைக்கரையில் நின்று சத்தியம் செய்வதாக இந்த வாக்கைச் சொன்னார்... வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி, நதைவம் கேசவாத் பரம் - என்று வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் உயர்ந்த ப்ரமாணமில்லை; கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறில்லை என்று சொன்னார். எனவே வேத சாஸ்த்ரங்களைக் கொண்டே ப்ரமாணம் கண்டறிய வேண்டும்.
வேதங்களே ப்ரமாணமாகிறது என்றால், வேதங்களால் அறியப்படும் பரம்பொருள் நித்யன் - அதாவது என்றுமுள்ளவன்; பிறப்பு முதலிய தோஷங்களால் தீண்டப்படாதவன்...
அதுபோல் அவன் புகழ் பாடும் வேதங்களும் நித்யமானவை, ஒருவரால் செய்யப்படாதவை என்பதால் மனிதர்களால் இயற்றப்படும் நூல்களுக்கு உண்டான குற்றங்கள் வேதங்களுக்குக் கிடையாது.

ஆழ்வார்கள் பாசுரங்களே பிரமாணங்கள்

வேதங்களின் தொடர்ச்சியாக ஏற்பட்ட தத்துவங்களை உபதேசிக்கின்ற தத்துவ தர்சிகள் யார் என்று நிச்சயிக்க வேண்டும். வேத வியாசர், பராசர முனிவர்  முதலிய ரிஷிகளும் தத்வ தர்சிகள்தான். ஆழ்வார் ஆசார்யர்களும் தத்வ தர்சிகளே. இவர்களில் நமக்கு மிக நெருங்கியவர்கள் யார் என்பதைப் பார்க்க வேண்டும். ரிஷிகளும் ஆழ்வார்களும் தத்வதர்சிகள் ஆனாலும் இரு வகையினருக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு.
ரிஷிகள் தங்கள் சுய முயற்சியால் ஞானம் பெற கடுந்தவம் செய்து ஞானமடைந்தனர். கடுந்தவத்தின் பயனாக, தவத்தின் தன்மைக்கேற்ப அவர்களுடைய ஞானமும் அமைந்தது. கடுந்தவத்தின் பயனாக இறைவன் அளித்த ஞானத்தை வெளிப்படுத்தியவர்கள் இந்த ரிஷிகள்.
ஆனால் ஆழ்வார்களின் பங்கு வித்தியாசமானது. ஆழ்வார்களைக் குறிப்பிடும்போதே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் என்றே சொல்வார்கள். அயர்வரும் அமரர்கள் அதிபதியான பகவானின் பேரருளாலே இயற்கை ஞானம் அளிக்கப்பட்டு அவதரித்தவர்கள் ஆழ்வார்கள். பக்திரூபமான பரிபூர்ண ஞானம் அடையப்பெற்ற ஆழ்வார்களின் ஞான முத்துக்கள்தான் பிரபந்தப் பாசுரங்கள் என்பது பெரியோர் வாக்கு.
பகவத் ராமானுஜர், பிரம்மசூத்ரங்களுக்கு பாஷ்யம் எழுதும்போது, ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களின் விளக்கங்களைத் துணைகொண்டு உரை எழுதினார் என்பது வரலாறு. ஆகவே ஆழ்வார்களே நமக்கு வழிகாட்டிகள். அவர்களுடைய பாசுரங்களே நமக்கு ப்ரமாணங்களாகின்றன.
Thanks :- http://prabandham.com/
Partha.

12/06/2010

வெற்றிக்கு வழி

ஞானிகளின் பாதை


செய்யும் செயலில் கவனம்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.

செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.


“எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படி
எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது”.

ஜென் மதக் கதை ஒன்று, குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார். சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன் உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.

ஞானோதயம்
தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான். இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.
அவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு முதல் ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.
மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது. என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான். சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!!!

தொகுப்பு :- Partha

12/05/2010

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகள்

ஒருமுறை எண்ணெய் வியாபாரி ஒருவர், குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். அவர் நெடுநேரம் குருதேவரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். குருதேவரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது. ""குருதேவா! நான் எண்ணெய் வியாபாரம் செய்துவந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும்பொருள் சேர்ந்தது. வயது ஏறஏற தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிவைத்துவிட்டு, வியாபாரத்தையும் அவர் களிடம் ஒப்படைத்தேன்.

பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்டபிறகும் தெய்வதரிசனம் கிடைக்கவில்லையே ஏன்?'' என்று ஏக்கத்துடன் தெரிவித்தார். ராமகிருஷ்ணர் வியாபாரியைப் பார்த்து,"" நீர் ஒரு வியாபாரி. நேற்றுவரை வியாபாரத்தில் அக்கறை காட்டினீர்! உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெயை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் இருந்த எண்ணெய் தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா?'' என்று அவர் பாணியிலேயே பதில் கேள்வி கேட்டார். வியாபாரி, ""குருவே! மன்னித்துவிடுங்கள்! நான் தான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்துவிட் டேன்! சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம்.

ஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்கமுடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்துவிட்டேன்,'' என்று சொல்லி குருதேவரை வணங்கினார்.
தொகுப்பு :- Partha.

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியமான இந்திய சமயத் தலைவர்.
விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லைேயோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.
'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.
எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.
நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?
‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

 தொகுப்பு :- Partha.